என்னுடைய இன்ஸ்டா அக்கவுண்ட்டை, ஒருநாள் பெண்களிடம் கொடுக்கிறேன்: பிரதமர் மோடி சொன்னது எதற்காக?
PM Modi: தேசத்தின் தாய்மை சக்தியானது, நமது சுதந்திரப் போராட்டம் மற்றும் அரசியலமைப்புச் சட்ட அமைப்பிலும் கூட பெரிய பங்களிப்பை அளித்திருக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் இன்ஸ்டாகிராம், எக்ஸ் ஆகிய சமூக வலைதள பக்கத்தை, நீங்கள் பயன்படுத்த வேண்டுமா.!, அதற்காக ஒரு வாய்ப்பு..பிரதமர் மோடி , தனது சமூக வலைதள பக்கத்தை , ஒரு நாள் பெண்களிடம் கொடுக்கப்போவதாக தெரிவித்திருக்கிறார். எதற்காக சொன்னார்?, உங்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டுமா , அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.
பிரதமரின் மனதின் குரல்:
பிரதமர் மோடி ம் இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் உரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது, உலகின் அனைத்து பெண்சக்திகளும் கூட தேவியின் வடிவங்களே என்றும் நமது கலாச்சாரத்தில் பெண்களுக்கு மரியாதை செலுத்துவது தலையாயதாகக் கருதப்படுகிறது என்றும் தேசத்தின் தாய்மை சக்தியானது நமது சுதந்திரப் போராட்டம் மற்றும் அரசியலமைப்புச் சட்ட அமைப்பிலும் கூட பெரிய பங்களிப்பை அளித்திருக்கிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நமது தேசியக் கொடியை அமைப்பதிலும், பெண்களின் பங்களிப்பை இருந்தது. நீங்கள் எந்த ஒரு துறையை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள், பெண்களின் பங்களிப்பு எத்தனை பரவலானதாக இருக்கிறது என்பதைக் காண இயலும்.
பெண்கள் தினம்
அடுத்த மாதம் மார்ச் 8ஆம் தேதியன்று நாம் சர்வதேச பெண்கள் தினத்தைக் கொண்டாட இருக்கிறோம். இது நமது பெண் சக்தியைப் போற்றும் ஒரு சிறப்பான சந்தர்ப்பம். இந்த முறை பெண்கள் தினத்தன்று நான் ஒரு முன்னெடுப்பைச் செய்ய இருக்கிறேன், இதை நமது பெண்சக்திக்கு அர்ப்பணிப்பாகச் செய்ய இருக்கிறேன். இந்த சிறப்பான சந்தர்ப்பத்திலே, என்னுடைய சமூக ஊடகக் கணக்கான எக்ஸ், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில், உத்வேகம் தரும் தேசத்தின் சில பெண்களுக்கு ஒரு நாளை அர்ப்பணிக்க இருக்கிறேன். இப்படிப்பட்ட பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள், புதுமைகள் படைத்திருக்கிறார்கள், பல்வேறு துறைகளில் தங்களுடைய தனித்துவ அடையாளங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
பெண்களுக்கு வாய்ப்பு:
மார்ச் மாதம் 8ஆம் தேதியன்று இவர்கள் தங்களுடைய பணிகள், அனுபவங்களை நாட்டுமக்களோடு பகிர்ந்து கொள்வார்கள். தளம் வேண்டுமானால் என்னுடையதாக இருக்கலாம், ஆனால் அங்கே அவர்களுடைய அனுபவங்கள், அவர்கள் எதிர்கொண்ட சவால்கள், அவர்கள் படைத்த சாதனைகள் பற்றியே பேச்சு இருக்கும்.
இந்தச் சந்தர்ப்பம் உங்களுக்கும் வாய்க்க வேண்டும் என்று நீங்களும் விரும்பினால், நமோ செயலியில் உருவாக்கப்பட்டிருக்கும் சிறப்பான மன்றம் வாயிலாக, இந்தச் செயல்பாட்டில் அங்கம் வகிக்கலாம், என்னுடைய எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து உலகம் முழுக்கவும், உங்களுடைய கருத்தைக் கொண்டு சேர்க்கலாம். வாருங்கள், இந்த முறை பெண்கள் தினத்தன்று நாமனைவரும் இணைந்து மகத்தான பெண்சக்தியைக் கொண்டாடுவோம், அதற்கு மரியாதை செலுத்துவோம், அதை வணங்குவோம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
”உடல்பருமன் அதிகரிக்கிறது”
என் நாட்டுமக்களே, தேஹ்ராதூனில் நடந்த தேசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவின் போது ஒரு மிகவும் முக்கியமான விஷயத்தை நான் முன்னெடுத்தேன். இது தேசத்தில் ஒரு புதிய விவாதப் பொருளானது. அதாவது உடற்பருமன். உடலுறுதிப்பாடும், ஆரோக்கியமும் உடைய ஒரு தேசமாக ஆக, நாம் உடற்பருமன் பிரச்சினையை எதிர்கொண்டாக வேண்டும். இன்று எட்டில் ஒருவர், உடற்பருமன் பிரச்சினையால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டுகளில் உடற்பருமன் கொண்டவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி இருக்கிறது என்றாலும், இதைவிடக் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், குழந்தைகளிடமும் இந்த உடற்பருமன் பிரச்சினை நான்கு மடங்கு அதிகரித்திருக்கிறது என்பதுதான். உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகளின்படி, 2022ஆண்டில், உலகெங்கிலும் சுமார் இரண்டரை கோடி மக்கள் அதிக எடை கொண்டவர்களாக இருக்கின்றார்கள். அதாவது தேவைக்கதிகமாக உடல் எடை உடையவர்களாக இருக்கிறார்கள்.
”எண்ணெயை குறைவாக வாங்குங்கள்”
இந்தப் புள்ளிவிபரம் மிகவும் கடுமையான ஒன்று, நம் அனைவரையும் ஆழச் சிந்திக்க வைப்பது, ஏன் இப்படி இருக்கிறது என்று ஆராயச் செய்கிறது. அதிக உடல் எடை அதாவது உடற்பருமன் பல வகையான பிரச்சினைகளுக்கு, நோய்களுக்கு வித்திடுகிறது. நாமனைவரும் இணைந்து சின்னச்சின்ன முயற்சிகள் மூலமாக இந்தச் சவாலை எதிர்கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக ஒரு வழிமுறையை ஆலோசனையாக அப்போது நான் கூறினேன் அல்லவா? உண்ணும் உணவில் பத்து சதவீதம் எண்ணையைக் குறைத்துக் கொள்வது. ஒவ்வோரு மாதமும் பத்து சதவீதம் எண்ணையை நான் குறைப்பேன் என்று தீர்மானியுங்கள். உணவு எண்ணையை வாங்கும் போது பத்து சதவீதம் குறைவாக வாங்குவது என்று நீங்கள் தீர்மானியுங்கள்.
உடற்பருமனைக் குறைக்கும் திசையில் இது மிக முக்கியமான அடியெடுப்பாக இருக்கும். மனதின் குரலில் இந்த விஷயம் குறித்து ஒரு சிறப்பான செய்தியை நான் உங்களிடத்தில் பகிர்ந்து கொள்ள விழைகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்தார்.