தெலங்கானா மாநிலத்தின் வாராங்கல் அருகே முலுகு மாவட்டத்தில் பாலம்பேட் என்ற இடத்தில் அமைந்துள்ள ராமப்பா கோயில் என அழைக்கப்படும்  ருத்ரேஷ்வரா கோயில், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் இடம் பிடித்துள்ளது. 13-ஆம் நூற்றாண்டின் பொறியியல் அற்புதமான ராமப்பா கோயிலை உருவாக்கியவர் ராமப்பா. இதை 2019ம் ஆண்டுக்கான, யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடம் பட்டியலில் சேர்க்கும்படி மத்திய அரசு பரிந்துரை செய்தது. அதன்படி யுனெஸ்கோ நேற்று  வெளியிட்ட சுட்டுரை செய்தியில், ‘‘இந்தியாவின் தெலங்கானா பகுதியில் உள்ள காகத்தியா ருத்ரேஷ்வரா (ராமப்பா) கோயில், உலக பாரம்பரிய இடமாக இப்போது சேர்க்கப்பட்டுள்ளது. சபாஷ்!’’ என குறிப்பிட்டுள்ளது.


காகத்தியா ராமப்பா கோயிலை, உலக பாரம்பரிய இடமாக, யுனெஸ்கோ அறிவித்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கம்பீரமான இந்த கோயில் வளாகத்துக்கு சென்று, அதன் பிரம்மாண்டத்தின் முதல் அனுபவத்தை பெற வேண்டும் என அவர் மக்களை கேட்டுக்கொண்டார்.




இதுகுறித்து அவர் ட்விட்டர் பதிவில், " நினைவு சின்னமான ராமப்பா கோயில், மிகச் சிறந்த காகத்தியா வம்சத்தின் சிறப்பான கைவினைத்திறனைக் காட்டுகிறது. இந்த கம்பீரமான கோயில் வளாகத்தை பார்வையிடவும், அதன் பிரம்மாண்டத்தின்  முதல் அனுபவத்தைப் பெறவும் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.’’ என குறிப்பிட்டுள்ளார்.






தெலங்கானா மாநிலத்தின் வாராங்கல் அருகே முலுகு மாவட்டத்தில் பாலம்பேட் என்ற இடத்தில் அமைந்துள்ள ராமப்பா கோயில் என அழைக்கப்படும்  ருத்ரேஷ்வரா கோயிலை  உலக பாரம்பரிய பட்டியலில் யுனெஸ்கோ சேர்த்ததற்கு, வழிகாட்டியதற்காகவும்,  ஆதரவு அளித்ததற்காகவும் பிரதமர்  நரேந்திர மோடிக்கு மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்  ஜி கிஷன் ரெட்டி நன்றி தெரிவித்துள்ளார்.


சீனாவில் இந்து சமயம் தொடர்பான ஆலயம் சேர்க்கப்பட்டடுள்ளது: 


தென்கிழக்கு சீன நகரமான குவான்ஜோவில் இந்து சமயத்துடன் தொடர்பு கொண்ட கோயில் உட்பட 22 தலங்கள் யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.


39 இடங்கள் உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன:


யுனெஸ்கோ அமைப்பு காடு, மலை, ஏரி, பாலைவனம், நினைவுச் சின்னம், கட்டிடம் மற்றும் நகரம் இந்த வகைகளின் தொகுப்புகளில் பாதுகாக்கப்பட வேண்டிய பாரம்பரியச் சின்னங்களை யுனெஸ்கோ பட்டியலில் இடம் பெறச் செய்துள்ளது.




2017 ஆம் ஆண்டு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஒவ்வொரு உறுப்பு நாடும் ஆண்டுக்கு ஒரு இடத்தை மட்டும் பரிந்துரைக்க முடியும். உலகப் பாரம்பரிய சின்னமாக அங்கீகாரம் கிடைப்பது மிகுந்த கவுரவத்தை அளிப்பதாக அமையும். இது போன்ற அங்கீகாரம் உள்ளூர் பொருளாதாரத்தில் தாக்கத்தைத் ஏற்படுத்தி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையை அதிகரித்து, அதிக அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும், மேலும்,  உலகத் தரத்திலான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதுடன், உள்ளூர் கைவினைப் பொருட்கள், கைத்தறி மற்றும் பாரம்பரிய நினைவுப்பொருட்கள் விற்பனையை அதிகரிக்கவும் வழிவகுக்கும். 


தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் உள்ள மாமல்லபுரம் மற்றும் உலக அதிசயமான தாஜ்மஹால் உட்பட இந்தியாவில் உள்ள 38 இடங்கள் உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.