INDIA USA Trade: ”துப்பாக்கிய காட்டுனா பயந்துருவோமா?” நாங்க இப்படிதான் - ட்ரம்புக்கு இந்தியா பதிலடி
INDIA USA Trade: இந்திய அரசாங்கம் எந்தவொரு வணிக ஒப்பந்தத்தையும் அவசரகதியில் மேற்கொள்ளாது என, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

INDIA USA Trade: இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு மத்தியில் பியூஷ் கோயலின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மத்திய அமைச்சர் நம்பிக்கை:
குறுகிய கால இலக்குகளை அடைவதற்காக இந்தியா எந்தவொரு வணிக ஒப்பந்தத்தையும் அவசர கதியில் மேற்கொள்ளாது என, மத்திய வணிக மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். நமது அணுகுமுறை என்பது நியாயத்தன்மை, நீண்டகால கூட்டாண்மை மற்றும் தேசிய நலன் ஆகியவற்றில் மிகவும் உறுதியாக உள்ளது என பேசியுள்ளார். பெர்லின் குளோபல் டயலாக்கில் உரையாற்றியபோது, இந்தியாவின் வர்த்தக உத்தியானது அரசியல் அல்லது ராஜதந்திர அழுத்தத்தை விட நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சியைச் சுற்றியே உள்ளது” என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
”துப்பாக்கியை வெச்சாலும் முடியாது”
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பியூஷ் கோயல், “தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா உடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால், அவசர கதியில் அவை கையெழுத்தாகாது. காலக்கெடுவை நிர்ணயித்துக் கொண்டு நாங்கள் ஒப்பந்தங்களை மேற்கொள்வதில்லை. அதோடு, எங்கள் தலையில் துப்பாக்கியை வைப்பதாலும் ஒப்பந்தங்கள் உருவாகாது.
வர்த்தக ஒப்பந்தங்கள் நீண்ட காலத்திற்குரியவை. இது வரிகளைப் பற்றியது மட்டுமல்ல, நம்பிக்கை மற்றும் உறவைப் பற்றியது. வர்த்தக ஒப்பந்தங்கள் வணிகங்களைப் பற்றியது. இது அடுத்த ஆறு மாதங்களில் என்ன நடக்கப் போகிறது என்பது பற்றியது அல்ல. இது அமெரிக்காவிற்கு எஃகு விற்க முடிவது பற்றியது மட்டுமல்ல. தேசிய நலன் தவிர வேறு எந்தக் கருத்தாய்வுகளின் அடிப்படையிலும் இந்தியா தனது நண்பர்கள் யார் என்பதை ஒருபோதும் முடிவு செய்ததில்லை என்று நான் நினைக்கிறேன். யாரோ ஒருவர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நீங்கள் நட்பு கொள்ள கூடாது என்று எங்களிடம் கூறினால் நாங்கள் அதை ஏற்கமாட்டோம். அதேநேரம், நாளை யாராவது கென்யாவுடன் நட்புறவு கூடாது என குறிப்பிட்டாலும் ஏற்கமாட்டோம்” என அமைச்சர் பேசியுள்ளார்.
வணிக ஒப்பந்தத்தில் சிக்கல்
இந்தியா - அமெரிக்கா இடையேயான தடையில்லா வர்த்தகத்திற்கான ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாகவும், அதன்கட்ட முதற்கட்ட பகுதியில் ஆண்டின் இறுதியில் கையெழுத்தாகலாம் என்றும் கூறப்படுகிறது. அதேநேரம், சந்தை அணுகல், சுற்றுச்சூழல் தரநிலைகள் மற்றும் பிரதான விதிகள் தொடர்பான அம்சங்களில் சிக்கல்கள் நீடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் வணிக ஒப்பந்தங்கள் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கியுள்ளார்.
ட்ரம்புக்கு பதிலடி:
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்திய பொருட்கள் மீது, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 50 சதவிகிதம் வரி விதித்துள்ளார். அதேநேரம், வணிக ஒப்பந்தத்தில் அவர்களது விவாசய பொருட்களுக்கு, இந்திய சந்தையை திறந்துவிட மத்திய அரசு மறுப்பதே கூடுதல் வரிக்கு காரணமாக கூறப்படுகிறது. இந்தியாவிற்கு வரிகள் மூலம் மேலும் அழுத்தம் கொடுக்கவும் ட்ரம்ப் தொடர்ந்து முயன்று வருகிறார். இந்நிலையில் தான், எந்தவொரு அழுத்தத்தின் கீழும், இந்தியா வணிக ஒப்பந்தங்களை மேற்கொள்ளாது என மத்திய அமைச்சர் பேசியுள்ளார்.





















