புதுச்சேரியில் பெண்கள் மட்டும் பயணிக்கும் வகையில் ‘பிங்க்’ பேருந்து இயக்கப்படும் என்றும், வாரந்தோறும் சனிக்கிழமை பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க சிறப்பு முகாம் நடத்தப்படும் என்றும் சட்டப்பேரவையில் அமைச்சர் சந்திரபிரியங்கா அறிவித்துள்ளார்.


புதுச்சேரி சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீது உறுப்பினர்கள் பேசியதற்கு பதிலளித்து அமைச்சர் சந்திரபிரியங்கா பேசியதாவது:


போக்குவரத்து துறை அலுவலகங்களில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பெண்களுக்கு மட்டும் ஓட்டுநர் உரிமம் வழங்க சிறப்பு முகாம் நடத்தப்படும். பெண்கள் மட்டும் பயணிக்கும் வகையில் ஜிபிஎஸ், சிசிடிவி வசதியுடன் கூடிய ‘பிங்க்கலர்’ பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.




மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து காற்று மாசுபடுவதைக் குறைக்க, அனைத்து மின்சார வாகனங்களுக்கும் சாலை வரியில் 50 சதவீதம் விலக்கு அளிக்கப்படும். இ-ரிக்சா பயன்பாட்டைக் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசு திட்டத்தின் கீழ் 200 புதிய பேருந்துகள் வாங்கப்படும்.


ஆன்லைன் ஃபிட்னஸ் சான்றிதழ் (Online Fitness Certificate) வழங்க மத்திய, மாநில அரசு நிதி உதவியுடன் வாகனத் தர உறுதி ஆய்வு மையம் அமைக்கப்படும். மத்திய, மாநில அரசு நிதி உதவியுடன் புதுச்சேரி, காரைக்காலில் வட்டார ஓட்டுநர் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்.




பயணிகளுக்குப் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய பேருந்துகளில் ஜிபிஎஸ், சிசிடிவி வசதிகள் பொருத்தவும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் மூலம் மாணவர்களுக்கு நீட், ஜேஇஇ, ஐஏஎஸ் தேர்வுகளுக்குப் பயிற்சி வழங்க ஸ்மார்ட் பயிற்சி மையத்துடன் கூடிய அம்பேத்கர் மணிமண்டபம் காரைக்காலில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


கலை பண்பாட்டுத்துறை மூலம் கலைஞர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை ரூ.500 உயர்த்தி வழங்கப்படும். ரோமன் ரோலண்ட் நூலகம் விரிவாக்கம் செய்யவும், புதுச்சேரியில் நூலகச் சட்டம் அமல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.


மறைந்த முன்னாள் முதல்வர் ப.சண்முகத்துக்கு காரைக்காலில் சிலை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மத்திய அரசு உருவாக்கியுள்ள e-SHRAM வலைதளத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் விவரங்கள் சிறப்பு முகாம்கள் மூலம் டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்யப்படும்.


 





அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் பிரத்யேக எண் கொண்ட அடையாள அட்டை வழங்கப்படும். தொழிற்சாலைகளில் பணியாளர் பாதுகாப்பு குறித்து பாதுகாப்பு தணிக்கை செய்யப்படும். வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் ஒரு யூடியூப் சேனல் தொடங்கப்படும். மேட்டுப்பாளையத்தில் மாதிரி ஐடிஐ அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


மத்திய அரசு நிதி உதவி மூலம் காரைக்கால் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மாடல் கெரியர் சென்டர் தொடங்கப்பட உள்ளது. புதுச்சேரி ஒரு பார்வை 2020-21 புத்தகம் விரைவில் வெளியிடப்படும். மாதாந்திர விலைவாசி புள்ளிவிவர சிற்றேடு தொடர்ந்து வெளியிடப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா தெரிவித்தார்.