Delhi Earthquake: இரவில் வீட்டை விட்டு ஓடி வந்த டெல்லிவாசிகள்... 7 நாடுகளை நடுநடுங்க வைத்த ஆப்கன் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் டெல்லிவாசிகள் இரவில் வீடுகளை விட்டு சாலைகளில் அச்சத்துடன் தஞ்சம் புகுந்தததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

Continues below advertisement

ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது ஜூர்ம் நகரம். இந்துகுஷ் மலைப்பகுதிக்கு உட்பட்ட இந்த பகுதியில் நேற்று இரவு 10.22 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு தகவலின்படி 187.6 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.5 ஆக பதிவாகியுள்ளது.

Continues below advertisement

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இந்தியா, கஜகஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் சீனா மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்தியாவின் தலைநகரான டெல்லியில் நிலநடுக்கத்தின் தாக்கத்தை மக்கள் நன்றாகவே உணர்ந்தனர். திடீரென்று கட்டிடங்கள் குலுங்கியதாலும், வீடுகளில் உள்ள பொருட்கள் ஆட்டம் கண்டதாலும் வீடுகள், குடியிருப்புகளில் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு நடுரோட்டிற்கு வந்தனர்.

மக்கள் திடீரென கூட்டம், கூட்டமாக சாலையின் நடுவே அச்சத்தில் குவிந்ததால் பெரும் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.

டெல்லியின் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததால் மக்கள் பெரும்பாலானோர் தங்கள் குழந்தைகள் மற்றும் வீட்டில் உள்ள வயது முதிர்ந்தவர்களை அழைத்துக் கொண்டு அவசரம், அவசரமாக பொதுவெளிக்கு வந்தனர்.

இந்த நிலநடுக்கமானது டெல்லி மட்டுமின்றி நொய்டா, காசியாபாத், உத்தரகாண்ட் மாநிலத்தின் சில பகுதிகள், ஹிமாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளிலும் உணரப்பட்டது. இதனால், அங்கு வசித்து வரும் மக்களும் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம் புகுந்தனர்.

நிலநடுக்கத்தால் மக்கள் வீட்டை விட்டு சாலைகளிலும், பாதுகாப்பான பொதுவெளிக்கும் வந்து தஞ்சம் அடைந்ததால் இந்த வீடியோ இணையம் முழுவதும் வைரலானது. டெல்லி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த நிலநடுக்கத்தால் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் தயார் நிலைக்குச் சென்றனர்.  அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

டெல்லியில் ஏற்பட்ட இந்த பதற்றத்திற்கு காரணமான ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் கைபர், ஸ்வாபி, மார்டன் மற்றும் பாகிஸ்தானில் உள்ள சங்லா ஆகிய நகரங்களில் இதுவரை 7 பேர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலும் வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

 

Continues below advertisement