கொல்கத்தாவில் கனமழை தற்போது பெய்வதில்லை என்ற போதும், இந்த செப்டம்பர் மாதம் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமான மழை பெய்துள்ளது. சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனினும், சிலருக்கு இந்த நிலையிலும் அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.
கொல்கத்தாவின் நியூ டவுன் பகுதியில் பிரதான சாலையில் மழைநீர் தேங்கியிருப்பதையடுத்து, அப்பகுதி மக்கள் சாலை மீது வலை வீசும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பலரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக, கட்லா உள்ளிட்ட பெரிய மீன்கள் கூட சிலருக்குக் கிடைத்திருக்கிறது.
பியூ மொண்டொல் என்ற அப்பகுதிவாசி ஒருவர், இந்த நிகழ்வை வீடியோ எடுத்து, தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் ஒரு ஆண் சாலையோரப் பாதையில் நின்றபடி, தனது வலைகளில் அதிகளவிலான மீன்களைப் பிடிப்பது போல ஒரு காட்சி இடம்பெற்றிருக்கிறது. அந்தப் பதிவில் அவர், கடந்த செப்டம்பர் 21 அன்று, சாலை மழைநீரில் மூழ்கியதாகவும், அப்போதே அப்பகுதிவாசிகள் மீன் பிடிப்பதற்காகத் தயாரானதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவர் உணவு வாங்குவதற்குத் தனது சகோதரனுடன் சென்ற போது, சுமார் 100 பேர் மீன் பிடித்துக் கொண்டிருந்ததாகவும், அவரும் அவரது சகோதரரும் சாலையில் இறங்கி மீன் பிடித்ததாகவும் தெரிவித்துள்ளார். வெறும் கைகளிலேயே இருவரும் 4 அல்லது 5 கட்லா வகை மீன்களைப் பிடித்ததாகவும், பிறகு வலை எடுத்து வந்து மீன் பிடித்ததாகவும் கூறியுள்ளார்.
இதுபோன்ற அதிசய சம்பவங்களை நேரில் காண்பது இதுவே முதல் முறை எனக் கூறியுள்ள பியூ மொண்டொல் அப்பகுதியின் கரிகோரி பவன் கட்டிடம் முதல் ஆக்சிஸ் மால் கட்டிடம் வரையிலான சாலையில் மக்கள் சுமார் 15 கிலோ மீன்களைப் பிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் அதிகாலை 4 மணி வரை, மக்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அப்பகுதியின் அருகில் இருந்த குளம், கனமழையால் உடைந்ததால் மீன்கள் சாலைகளை எட்டியிருக்கலாம் என அப்பகுதி மக்கள் கருதுகின்றனர். மேலும், மழை பெய்த மறுநாள், அப்பகுதியில் அதிகளவிலான மீன்கள் பகிர்ந்து கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஒருபக்கம் மக்கள் இப்படி ரசித்து, மீன் பிடித்து, சாப்பிட்டு, மகிழ்ந்து கொண்டிருந்த மக்கள், மறுபக்கம் தங்கள் வீடுகளுக்குள் இதுவரை எந்த மழையின் போதும் மழைநீர் நுழைந்ததில்லை எனவும் தங்கள் துயரத்தைப் பகிர்ந்துள்ளனர். மழை பெய்வது குறைந்தவுடன் பெரும்பாலான பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீர் வடிந்துள்ளது. எனினும், நியூ டவுன் - பக்ஜோலா, கெஸ்டாபூர் ஆகிய நீர் வடிகால் கால்வாய்கள் இப்பகுதியில் இருப்பதால் கனமழையால் தேங்கிய நீர் வெளியேறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.