பெகசஸ் போன் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் ஒன்பது பேர் தனித்தனியாகத் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா, பத்திரிகையாளர் என்.ராம், கம்யூனிஸ்ட் எம்.பி. ஜான் பிரிட்டாஸ், ஜகதீப் சோக்கர், நரேந்திர மிஸ்ரா, ருபேஷ் குமார் சிங், பரோஞ்சய் ராய் தாக்கூர்தா, எஸ்.என்.எம்.அப்தி மற்றும் இந்திய எடிட்டர்ஸ் கில்ட் அமைப்பு ஆகிய ஒன்பது பேர் இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தனர். 


வழக்கு தொடர்ந்தவர்கள் தரப்பில் காங்கிரஸ் மூத்த தலைவரும்  வழக்கறிஞருமான கபில் சிபல் ஆஜரானார். தொடக்கம் முதலே இந்த விவகாரம் குறித்து சராமரியாகக் கேள்விகளை எழுப்பினார் நீதிபதி ரமணா. ‘ஊடகங்களில் வந்த இந்த செய்திகள் அத்தனையும் உண்மையானால் இந்த விவகாரம் தீவிரமானது.ஆனால் தொடரப்பட்டிருக்கும் வழக்கில் அத்தனையும் ஊடகங்கள் சொல்வதாகத்தான் உள்ளதே தவிர வேறு எந்த ஆவணமும் இல்லை. பாதிக்கப்பட்டவர்களும் தங்களது ஃபோன் ஒட்டுக்கேட்கப்பட்டது என்கிறார்களே தவிர வேறு எந்த ஆதாரமும் தரவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் யாருமே ஏன் கிரிமினல் வழக்கு தொடரவில்லை’ எனக் கேள்வி எழுப்பினார். 






இதற்கு பதிலளித்த கபில் சிபல், ‘கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கை என்.ராம் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் அரசின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த சாஃப்ட்வேர் நிறுவப்பட்டதாகச் சொல்லப்பட்டிருக்கிறது’ எனச் சுட்டிக்காட்டினார். 


’இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த விவகாரத்தை தற்போது மீண்டும் விவாதிக்க அவசியம் என்ன?’ என நீதிபதி ரமணா கேள்வி எழுப்பினார். ’வாஷிங்டன் போஸ்ட் ஊடகம் இந்தியர்கள் 122 பேரின் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. இதனை அமைச்சர் ஒருவரும் உறுதி செய்துள்ளார். ஆனால் அதுகுறித்து அரசு எதுவும் முதல் தகவல் அறிக்கை ஃபைல் செய்யாதது ஏன்?’ எனக் கேள்வி எழுப்பினார். 


வழக்கு தொடர்ந்தவர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மீனாட்சி அரோரா, நவம்பர் 2019ல் நாடாளுமன்றத்தில் இந்த பெகசஸ் தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டதைக் குறிப்பிட்டார். அப்போது காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் வாட்சப் ஹேக் செய்யப்படுவது குறித்து கேள்வி எழுப்பியதையும் குறிப்பிட்டார். மேலும் என்.எஸ்.ஓ நிறுவனம் இந்த பெகசஸ் சாப்ட்வேரை இறையாண்மைத் தகுதியுடைய நிறுவனம்தான் உபயோகிக்க முடியும் எனக் குறிப்பிட்டிருந்தது. ஒட்டுக்கேட்கப்பட்டவர்கள் பட்டியலை பிரெஞ்சு நிறுவனம் வைத்திருந்தது. அது ஊடகத்துக்கு அளிக்கப்பட்டதை அடுத்தே இந்த விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.


’ஒருபோனை ஒட்டுக்கேட்க 55000 டாலர்கள் செலவாகிறது எனச் சொல்கிறார்கள். இறையாண்மை தகுதியுடைய நிறுவனங்கள் தீவிரவாதிகளை ஒட்டுக்கேட்பதற்குதான் இந்த பெகசஸ் சாப்ட்வேர் பயன்படுத்தப்படுகிறது என்றால் இந்தியாவில் தற்போது ஒட்டுக்கேட்கப்பட்டவர்கள் அனைவரும் தீவிரவாதியா?’ என கபில் சிபல் கேள்வி எழுப்பினார்.


இருந்தும் நீதிபதி ரமணா, ‘ஏன் யாருமே முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்யவில்லை?’ என்கிற கேள்வியையே தொடர்ந்து முன்வைத்து வருகிறார். 

இதையடுத்து தொடர்ச்சியாக நடைபெற்ற வாக்குவாதத்துக்குப் பிறகு வழக்கு விசாரணையை வருகின்ற ஆகஸ்ட் 10 தேதிக்குத் தள்ளிவைத்தார் தலைமை நீதிபதி