உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள பதஞ்சலி பல்கலைக்கழகத்தில் 62வது அகில இந்திய சாஸ்த்ரோத்சவ் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய புஷ்கர் சிங் தாமி, "நமது வேதங்கள் வெறும் புத்தகங்கள் அல்ல, மாறாக பிரபஞ்சத்தின் மர்மங்களைப் புரிந்துகொள்வதற்கான ஒரு வழிமுறையாகும்" என்றார்.

Continues below advertisement

"அறிவின் பொக்கிஷமாக திகழும் வேதம்"

தொடர்ந்து பேசிய புஷ்கர் சிங் தாமி, "இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் வேர்கள் நமது பண்டைய வேதங்களில் உள்ளன. இவை அறிவியல், யோகா, கணிதம், மருத்துவம் மற்றும் தத்துவம் போன்ற துறைகளில் அறிவுப் பொக்கிஷத்தைக் கொண்டுள்ளன.

Continues below advertisement

முனிவர்கள் நடத்திய ஆராய்ச்சியைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், அதைப் புதிய வழிகளில் வளர்ப்பது அவசியம். சமஸ்கிருதம் மற்றும் வேதங்களின் அறிவை தேசத்திற்கும் உலகிற்கும் பரப்புவதற்கு இந்த விழா பயன்பட வேண்டும்" என்றார்.

விழாவில் பேசிய பதஞ்சலி பல்கலைக்கழக வேந்தரும் யோகா குருவுமான பாபா ராம்தேவ், "சமஸ்கிருதம் வெறும் மொழி மட்டுமல்ல, உலகம் முழுவதும் எந்தத் துறையிலும் தலைமைத்துவத்தை வழங்கும் திறன் கொண்டது. உலகுக்கு தேவையான அறிவும் மற்றும் துறைகளும் சனாதன தர்மம் மற்றும் பண்டைய இந்திய வேதங்களில் உள்ளன.

பதஞ்சலி பல்கலைக்கழகத்தில் சாஸ்த்ரோத்சவ் விழா:

அனைத்து மூல மொழிகளும் சமஸ்கிருதத்திலிருந்து தோன்றின. நாம் அனைவரும் அதைப் பற்றி பெருமைப்பட வேண்டும். சமஸ்கிருத மொழியின் பரவலை ஊக்குவிக்கவும், இந்திய அறிவு மரபை மீண்டும் நிலைநாட்டவும் வேண்டும்" என்றார்.

விழாவில் பதஞ்சலி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா பேசுகையில், "புனித யாத்திரைக்கு ஒப்பானது சமஸ்கிருதம். அது, கலாச்சாரத்தின் பெருமை. நாடு முழுவதும் உள்ள அறிஞர்கள் மற்றும் மாணவர்கள் இந்திய வேதங்களின் முக்கியத்துவத்தை மக்களிடம் பரப்புவதற்கான முயற்சிகளைத் தொடர வேண்டும்" என்றார்.

விழாவில் பேசிய உத்தரகண்ட் முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் மத்திய கல்வித்துறை அமைச்சருமான ரமேஷ் போக்ரியால் ‘நிஷாங்க்’, "சமஸ்கிருதத்தில் அறிவு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளன. உத்தரகண்டில் சமஸ்கிருதத்திற்கு ராஜ்பாஷா அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது" என்றார். இந்த விழாவில் 30 மாநிலங்களைச் சேர்ந்த பங்கேற்பாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.