Devar Jayanthi: நம் நாட்டிற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆற்றிய பங்கு தலைசிறந்தது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றன. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மற்றும் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை தெரிவித்து வருகின்றனர்.


ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் ஆண்டுதோறும் அனைத்து அரசியல் பிரமுகர்கள், சமுதாய மக்கள் கலந்துகொள்வது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டும் பசும்பொன்னில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர். அதேபோல பல்வேறு கட்சியினர் மரியாதை செலுத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் மட்மின்றி சென்னை, மதுரையிலும் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு திமுக, அதிமுக, மதிமுக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.


இந்நிலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி அவரை வணங்குவதாக ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, ” பெருமதிப்பிற்குரிய  பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன். சமூக மேம்பாடு, விவசாயிகள் நலன், வறுமை ஒழிப்பு முதலியவை உட்பட நம் தேசத்திற்காக அவர் ஆற்றிய தலைசிறந்த பங்களிப்பை நினைவு கூர்கிறேன். அவரது கொள்கைகள் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கும்" என்று கூறினார்.






இதற்கு முன்னர் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திமுக துணை பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.






மேலும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.