கிட்டத்தட்ட 100 ஆண்டுகால அயோத்தி சர்ச்சை கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. சர்ச்சைக்குரிய இடம் இந்து தரப்பினருக்கு சொந்தம் என்றும் அங்கு அயோத்தி கோயில் கட்டவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இச்சூழலில், அயோத்தி கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது.


அயோத்திக்கு விமானத்தில் செல்ல புது அவதாரம் எடுத்த பயணிகள்:


அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு குஜராத்தில் இருந்து அயோத்திக்கு முதல் நேரடி விமானம் சென்றுள்ளது. அப்போது, இண்டிகோ விமானத்தில் செல்வதற்காக பயணிகள் சிலர் ராமாயணத்தில் வரும் கதாபாத்திரங்கள் வேடத்தில் சென்று சக பயணிகளை வியப்பில் ஆழ்த்தினர். ராமர், சீதை, அனுமன் போன்ற வேடத்தில் பயணிகள் சென்றுள்ளனர்.


குஜராத் அகமதாபாத்தில் இருந்து உத்தரப் பிரதேசம் அயோத்திக்கு நேரடி விமான சேவை இன்று தொடங்கியது. அயோத்தியில் புதிய விமான நிலையம் செயல்படத் தொடங்கியதை அடுத்து, ஜனவரி 6ஆம் தேதி முதல் டெல்லியில் இருந்து அயோத்திக்கு விமானங்களை இயக்கி  வருகிறது இண்டிகோ நிறுவனம். மும்பையிலிருந்து நேரடி விமான சேவை வரும் வாரங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அயோத்தியில் 54,700 சதுர அடி பரப்பளவில் 360 அடி நீளமும், 235 அடி அகலமும், 16.5 அடி உயரமும் கொண்ட ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் வளாகத்தில் அருங்காட்சியகம், உணவகம் உள்பட பல்வேறு வசதிகள் பக்தர்களுக்காக செய்யப்பட்டு வருகிறது. மேலும், கோயில் கட்டுமான பணிக்காக ரூ.1800 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. 


 






அயோத்தி விமான நிலையம்:


அயோத்தியில் அமைக்கப்பட்டு வரும் ராமர் கோயிலில் 70 ஆயிரம் பேர் வரை ஒரு நேரத்தில் தரிசனம் மேற்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார்.  இந்த பிரம்மாண்ட விழாவில் ஏராளமான அரசியல் தலைவர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள், மடாதிபகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.


அயோத்தி கோயிலை தரிசனம் செய்ய நாடு முழுவதிலும் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி,  போக்குவரத்து வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. சர்வதேச தரத்தில் விமான நிலையமும் கட்டப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி, கடந்த டிசம்பர் 30ஆம் திறந்து வைத்தார்.   


ரூ.1450 கோடி செலவில் நவீன வசதிகளுடன் இந்த விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. அயோத்தி பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்திற்கு 'மகரிஷி வால்மிகி சர்வதே விமான நிலையம்' பெயர் சூட்டப்பட்டுள்ளது.