தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது தொடர் கதையாகி வருகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. இருப்பினும், இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது நின்றபாடில்லை.
அதன் தொடர்ச்சியாக, நவம்பர் 14ஆம் தேதி, பாக் ஜலசந்தி அருகே நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள், 14 பேர், மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, எல்லைப்பகுதியை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர். சிறையில் அடைத்தனர். மீன்பிடி படகுகளையும் சிறைபிடித்தனர்.
இதற்கு மத்தியில், மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய அரசுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் கடிதம் எழுதப்பட்டது. இதனை தொடர்ந்து, மீனவர்கள் 14 பேரையும், இலங்கை நீதிமன்றம் சமீபத்தில் விடுதலை செய்தது.
இவர்கள், ஏர் இந்தியா விமானம் வாயிலாக, நேற்று சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பாஸ்போர்ட் இல்லாததால், அவசர சான்றிதழ் வாயிலாக, அனைவரும் சென்னை திரும்பினர். சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவர்களை, மீன்வளத் துறை அதிகாரிகள் வரவேற்று, சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர்.
இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தை நாடாளுமன்ற குளிர்காலக் கூட்ட தொடரின் முதல் நாளிலேயே தென்சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பியுள்ளார்.
மக்களவையில் பேசிய எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழ்நாட்டு மீனவர்கள் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், "குஜராத் மீனவர்கள் இந்திய மீனவர்கள் என அழைக்கப்படும்போது, இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படும்போது அவர்களை ஏன் இந்திய மீனவர்கள் என்று அழைக்காமல் தமிழ்நாட்டு மீனவர்கள் என அழைக்கிறீர்கள். தமிழ்நாட்டு மீனவர்களை ஏன் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறீர்கள்" என கேள்வி எழுப்பினார்.
மேலும், தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நீதிமன்ற அமர்வுகளை அமைக்க மத்திய அரசிடம் திமுக எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று தொடங்கி டிசம்பர் 29ஆம் தேதி வரை நடைபெறும் குளிர்கால கூட்டத்தொடர், மொத்தம் 17 வேலை நாட்கள் நடைபெறகிறது. அமர்வின் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
புதிய மாநிலங்களவைத் தலைவராக பதவியேற்றுள்ள குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கரை வரவேற்று பிரதமர் மோடி உரையாற்றினார்.
"நாடு சுதந்திரம் அடைந்ததன் 75ஆவது ஆண்டு விழாவை கொண்டாடிவரும் நேரத்தில் ‘ Azadi Ka Amrit Mahotsav ’ நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் என்பது சிறப்பானது" என பிரதமர் மோடி தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் திரெளபது முர்மு மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோரையும் பிரதமர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.