ஹோர்முஸ் ஜலசந்தியில் நிலவிவரும் நிலையற்ற தன்மை மற்றும் அதிகரித்து வரும் மத்திய கிழக்கு பதட்டங்களுக்கு மத்தியில், கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 126 டாலராக உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவிற்கு இணையான மூலோபாய கையிருப்பு தன்னிடம் இல்லை என்பதை ஒப்புக்கொண்டு, உயர்ந்து வரும் உலகளாவிய எண்ணெய் விலைகளால் தனக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டுள்ளது .
உள்ளூர் ஊடகத்துக்கு பாக் , பெட்ரோலியத் துறை அமைச்சர் அலி பர்வேஸ் மாலிக்அளித்த பேட்டியில் , நாடு முழுவதுமாக வர்த்தக இருப்புகளையே சார்ந்துள்ளது என்றும், கச்சா எண்ணெய் கையிருப்பு ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு மட்டுமே போதுமானதாகவும், இது கணிசமாகப் பெரிய இருப்புகளைப் பயன்படுத்தும் இந்தியாவின் திறனை விட மிகவும் குறைவாகவும் உள்ளது என்றும் கூறினார்.
இந்தியாவிடம் இருக்கு.. ஆனா நாங்க
இந்தியாவிடம் சுமார் 60 முதல் 70 நாட்களுக்குத் தேவையான மூலோபாய (Strategic) மற்றும் வணிக ரீதியான எண்ணெய் இருப்பு உள்ளது. அதோடு வலுவான நிதி ஆதாரங்களைக் கொண்டுள்ளதால், சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களைத் தாங்கி, வரிகளைச் சீரமைப்பதன் மூலம் விலையைக் கட்டுக்குள் வைக்க இந்தியாவால் முடிகிறது என்று மாலிக் சுட்டிக்காட்டினார்.
ஒரு நேர்காணலில் பேசிய அவர், "எங்களிடம் (பாகிஸ்தான்) மூலோபாய எண்ணெய் இருப்பு எதுவுமில்லை, வணிக ரீதியான இருப்பு மட்டுமே உள்ளது. 60 முதல் 70 நாட்களுக்குத் தேவையான எண்ணெய் இருப்பு வைத்துக்கொண்டு, தேவைப்படும்போது உடனடியாக விடுவிக்கும் நிலையில் உள்ள இந்தியாவைப் போல நாங்கள் இல்லை" என்று வெளிப்படையாகத் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் உயரும் பெட்ரோல், டீசல் விலை
இந்தியாவில் எரிபொருள் விலை ஓரளவுக்கு நிலையாக இருக்கும் வேளையில், பாகிஸ்தானில் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு வியாழக்கிழமை அன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது. சர்வதேச சந்தையில் உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலையிலிருந்து சாமானிய மக்களைப் பாதுகாக்கும் நோக்கில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கும் போக்குவரத்துத் துறைக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மானியங்களை அரசு நீட்டித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஒப்புதலுடன், மே 8-ம் தேதியுடன் முடிவடையும் வாரத்திற்கு உடனடியாக அமலுக்கு வரும் வகையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 6.51 பாகிஸ்தான் ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 19.39 பாகிஸ்தான் ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 10 மாதங்களில் பெட்ரோலிய வரி வசூல் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைத் தாண்டியுள்ளதாக IMF-இடம் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
IMF ஒப்பந்தத்தை மீறினால் ஆபத்து: அமைச்சர் எச்சரிக்கை
பாகிஸ்தான் அரசு சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) அளித்துள்ள வாக்குறுதிகளால், கொள்கை ரீதியான முடிவுகளை எடுப்பதில் பல்வேறு கட்டுப்பாடுகளைச் சந்தித்து வருகிறது. வரியைக் குறைக்க IMF உடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறிய மாலிக், டீசல் மீதான வரிச் சுமையைப் பெட்ரோலுக்கு மாற்றுவது மற்றும் நுகர்வோருக்கு மானியம் வழங்குவது குறித்து விவாதித்ததாகத் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் பேசிய அவர், "டீசல் விலை 3 முதல் 4 மடங்கு வரை உயர்ந்துள்ள நிலையில், அதன் மீதான வரியைச் சுழியமாகக் (Zero) குறைத்து, அந்தச் சுமையை முழுவதுமாகப் பெட்ரோல் மீது மாற்ற முடிவு செய்தோம். அதே சமயம் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு மானியம் வழங்கி அவர்களைப் பாதுகாத்துள்ளோம்" என்றார். இருப்பினும், IMF ஒப்பந்தத்தை மீறினால் அதன் விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
இறுதியாக, "நாங்கள் நடத்திய தொடர் பேச்சுவார்த்தையின் பலனாக, லிட்டருக்கு 80 ரூபாய் வரை வரியைக் குறைக்க IMF-ஐச் சம்மதிக்க வைத்தோம்" என்று அவர் குறிப்பிட்டார்.
