ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த சுற்றுலாப் பயணிகள், இந்திய ராணுவத்தினரையே பார்த்து பயந்து வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி பார்ப்பவர்களை கதிகலங்க வைத்துள்ளது. 

பஹல்காம் தாக்குதல்:

ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரைக்கு அருகே  பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்தினர். அப்போது சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 28 உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது. இந்த தாக்குதல் சம்பவம் காரணமாக பிரதமர் மோடி தனது சவுதி அரேபியா பயணத்தை ரத்து செய்துவிட்டு உடனடியாக நாடு திரும்பினர். 

மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று காலை காஷ்மீருக்கு சென்று இறந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார், மேலும் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்,

ராணுவத்தினரை கண்டு பயந்த மக்கள்:

இந்த நிலையில் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிய ஒரு சில மக்களை இராணுவ வீரர்கள் சந்தித்தபோது ஏற்பட்ட பதட்டமான தருணங்களைப் படம்பிடித்த ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது . சீருடை அணிந்த சுமார் ஐந்து முதல் ஆறு பயங்கரவாதிகள், அப்பகுதியில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. 

அதிர்ச்சியடைந்த உயிர் பிழைத்தவர்களை அமைதிப்படுத்தவும், காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளிக்கவும் பாதுகாப்புப் பணியாளர்கள் முயற்சிப்பதை வீடியோ காட்டுகிறது. இருப்பினும், பீதியில் இருந்த சில சுற்றுலாப் பயணிகள், ஆயுதம் ஏந்திய இராணுவ வீரர்களைப் பார்த்து அழுது தங்கள் உயிருக்கு மன்றாடத் தொடங்கினர்.

ஒரு பெண், வெளிப்படையாகவே கலக்கமடைந்து, கண்ணீர் விட்டுக் கூப்பிய கைகளுடன், "தயவுசெய்து என் குழந்தையை காயப்படுத்தாதீர்கள்" என்று கெஞ்சும் வீடியோ பார்ப்பபவர்களை கண்கலங்க வைத்தது

வீரர்கள் உடனடியாக பயந்துபோன  மக்களை சமாதானப்படுத்தினர். "நாங்கள் இந்திய இராணுவம். உங்களைப் பாதுகாக்க நாங்கள் இங்கே இருக்கிறோம்," என்று ஒரு இராணுவ வீரர்  வீடியோவில் உள்ள பெண்ணிடம் கூறுவது கேட்கிறது. குழப்பத்தின் மத்தியில் அந்தப் பெண்ணின் மகனும் அழத் தொடங்கினான்."அப்பா, அப்பா!" பையன் பயந்து கத்தினான்.

பயங்கரவாத தாக்குதலின் போது தனது கணவர் இறந்ததை அந்தப் பெண் நேரில் பார்த்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அதிர்ச்சியால் மயக்கமடைந்து விழுவதற்கு முன்பு அவர் தொடர்ந்து துயரத்தில் அழுதுகொண்டே இருக்கிறார். வீரர்கள் அந்தப் பெண்ணை எழுப்ப உதவுவதையும், உயிர் பிழைத்த மற்றவர்களுக்கு தண்ணீர் மற்றும் உதவி வழங்குவதையும் காணலாம், இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.