காஷ்மீரின் பஹல்காமில், தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இந்த தாக்குதல் குறித்த தீவிர விசாரணையும் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது. என்ஐஏ விசாரித்து வரும் இந்த வழக்கில், தீவிரவாதிகளின் திட்டமிடல் பற்றிய பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடந்த தீவிரவாத தாக்குதல்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், சுற்றுலாப் பயணிகள் மீது ஏப்ரல் 22-ம் தேதி, தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. காஷ்மீரின் தெற்கு பகுதியில் உள்ள பஹல்காமை அடுத்த பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் இயங்கும் ரிசார்ட் ஒன்றில், சுற்றுலாப் பயணிகள் கேளிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் சுட்டதில், சுமார் 26 பேர் உயிரிழந்தனர். தீவிரவாதிகள் ஆண்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக, சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இஸ்லாமியர் அல்லாதவர்களை அவர்கள் சுட்டுக்கொன்றதாக, உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த தாக்குதலுக்கு, பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன. மேலும், தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியாவுடன் துணை நிற்போம் எனவும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு, பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய TRF (தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்) அமைப்பினர் பொறுப்பேற்றனர்.
இதனிடையே, பாகிஸ்தான் அரசு வேறு வழியின்றி தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாக, பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சரே பேசியதைத் தொடர்ந்து, இந்தியா அவர்களுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்
பாகிஸ்தான் மீதான நடவடிக்கைகள் ஒருபுறமிருக்க, மறுபுறம் தாக்குதல் தொடர்பான விசாரணயை என்ஐஏ மேற்கொண்டு வருகிறது. தாக்குதலுடன் தொடர்புடையதாக கருதப்படும் அப்பகுதியின் தரைத்தளத் தொழிலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு, அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
அவரது தகவலின்படி, தாக்குதல் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்னதாகவே, தீவிரவாதிகள் பல்வேறு பகுதிகளை உளவு பார்த்துவந்ததாக தெரிகிறது. ஏப்ரல் 15-ம் தேதியே பஹல்காம் பகுதிக்கு வந்த தீவிரவாதிகள், பைசரன் பள்ளத்தாக்கு, அரு பள்ளத்தாக்கு, உள்ளூரில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா, பேதாப் பள்ளத்தாக்கு ஆகிய இடங்களை உளவு பார்த்துள்ளதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பைசரன் பள்ளத்தாக்கு தவிர, மற்ற மூன்று இடங்களிலும் பாதுகாப்பு பலமாக இருந்ததால், அப்பகுதிகளில் அவர்கள் தாக்குதல் நடத்தவில்லை என தெரியவந்துள்ளது. இது குறித்து தீவிர விசாரணை நடத்திவரும் என்ஐஏ, பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் வேலை செய்துவந்த, தீவிரவாதிகளுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் 20 தொழிலாளர்களை அடையாளம் கண்டு, அதில் சிலரை கைது செய்து விசாரித்து வருகிறது.
அதில், 4 பேர், உளவு பார்ப்பதற்கு தீவிரவாதிகளுக்கு போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்து உதவியதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கு முன்னதாக, 3 சேட்டிலைட் ஃபோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் 2 ஃபோன்களின் சிக்னல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலில் ஈடுபட்டவர்களின் தொலைபேசி அழைப்பு விவரங்களை ஆராய்ந்து வருவதாகவும், அதில், அப்பகுதி தொழிலாளர்கள் சிலர் அவர்களுடன் தொடர்புகொண்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் என்ஐஏ கூறியுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக, என்ஐஏ இதுவரை 2,500 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளது. அதில், 186 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.