அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) தலைவர் அசாதுதீன் ஓவைசி, அருணாச்சல பிரதேசத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து அறிய ட்ரோன்களை அனுப்புமாறு பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். 


அருணாச்சலப் பிரதேசத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு கடந்து சீனா நிகழ்த்தி வரும் உள்கட்டமைப்பு மேம்பாடுகளைக் குறிப்பிட்டு ஓவைசி இவ்வாறு கருத்து கூறியுள்ளார்.


அண்மையில் கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, ”அரசாங்கப் பணியின் தரத்தை எங்காவது பார்க்க வேண்டும் என்றால், திடீரென ஆளில்லா விமானத்தை அனுப்பிப் பார்வையிடுவேன், எல்லாத் தகவல்களும் எனக்குக் கிடைத்துவிடும். ஆனால் அது யாருக்கும் தெரியாது”  என்று கூறினார். அவரது கருத்துக்கு பதில் அளிக்கையில் ஓவைசி இவ்வாறு தெரிவித்துள்ளார்.


“பிரதமர் மோடி அருணாச்சலத்திற்கு ஆளில்லா விமானத்தை அனுப்புங்கள், அங்கே உங்கள் சிறந்த நண்பர் சை (Xi) இந்திய மண்ணில் தனது காலனியை உருவாக்கியுள்ளார். மேலும் லடாக்கிற்கு ஆளில்லா விமானத்தை அனுப்பி, நமது பாங்காங் த்சோ ஏரியின் மீது சீனா எப்படி பாலம் கட்டுகிறது என்று பாருங்கள். தயவு செய்து உங்கள் ட்ரோனை டெம்சோக்கும் அனுப்பவும்”, என்று ஓவைசி ட்வீட் செய்துள்ளார்.


கடந்த வாரம், கிழக்கு லடாக்கில் சீனா இரண்டாவது பாலத்தை பாங்கோங் டிசோவில் கட்டுவதாக சீனக் கட்டுமானத்தை நன்கு அறிந்தவர்கள் தெரிவித்தனர். இரண்டாவது சீனப் பாலம் முதல் பாலத்தை விட பெரியது என்றும் மற்ற கனரக கவச வாகனங்களை நகர்த்த இந்தப் பாலம் அனுமதிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்த தகவலுக்கு எதிர்வினை ஆற்றியுள்ள  இந்தியா, பாங்காங் ஏரியில் சீனாவால் கட்டப்படும் இரண்டாவது பாலம் 1960 ஆம் ஆண்டு முதல் அந்நாட்டின் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள பகுதியில்தான் கட்டப்படுகிறது எனக் கூறி உள்ளது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், ”இதுபோன்ற சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை இந்தியா ஒருபோதும் ஏற்காது. பாங்காங் ஏரியில் அதன் முந்தைய பாலத்துடன் சீனாவால் மேலும் ஒரு பாலம் கட்டப்படுவதை கவனித்தோம்.இந்த இரண்டு பாலங்களும் 1960 களில் இருந்து சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் தொடர்ந்து இருக்கும் பகுதிகளில் உள்ளன” என்று கூறினாஅர்.


மேலும், இரு அமைச்சர்களின் வழிகாட்டுதல்கள் முழுமையாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, இராஜதந்திர மற்றும் ராணுவ மட்டங்களில் சீனத் தரப்புடன் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என்றும் அவர் கூறினார்.
சீனாவின் ஆக்கிரமிப்பு பகுதியில் ஒரு பாலம் கட்டப்பட்டதாக ஊடக அறிக்கைகள் சுட்டிக்காட்டினாலும், அது மற்றொரு பாலமா அல்லது ஏற்கனவே உள்ள பாலத்தின் விரிவாக்கமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.