சிறுவர் மீது பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 100க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் போர்ச்சுகலில் தேவாலயங்களில் இன்றளவும் பணியாற்றி வருகின்றனர் என்று அந்த விவகாரத்தை விசாரிக்கும் கமிஷனின் தலைவர் தெரிவித்துள்ளார்.


போர்ச்சுகீசிய கத்தோலிக்க திருச்சபை உறுப்பினர்களால், பெரும்பாலும் அங்கு பணியாற்றும் பாதிரியார்களால் 70 ஆண்டுகளுக்கும் மேலாக 4,815 குழந்தைகள் பாலியல் ரீதியாக வல்லுறவில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த கமிஷன் தனது பணியை 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது. இந்த கமிஷன் தனது அறிக்கை வெறும் சிறுதுளியே என்றும், இதுவரை விசாரிக்கப்பட்ட 4,815 வழக்குகளில் இது ஒரு குறைந்தபட்ச எண்ணிக்கையாகவே இருக்கும் என்றும் விவரிக்கிறது.


"தோராயமாக குற்றம்சாட்டப்பட்ட பாதிரியார்களின் எண்ணிக்கை 100க்கும் மேலானதாக இருக்கும்" என்று கமிஷனுக்கு தலைமை தாங்கிய குழந்தை மனநல மருத்துவர் பெட்ரோ ஸ்ட்ரெக்ட் அந்த நாட்டு ஊடகம் ஒன்றிடம் பகிர்ந்துள்ளார். இந்த பட்டியல் இன்னும் தயாரிப்பு நிலையில் உள்ளது என்றும் அது விரைவில் அரசு அலுவலகங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 


விசாரணையின்போது பட்டியலில் உள்ளவர்கள் தங்கள் பணிகளில் இருந்து நீக்கப்பட வேண்டும் அல்லது குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினருடன் தொடர்புகொள்வதை தடை செய்ய வேண்டும் என்று ஸ்ட்ரெக்ட் கூறினார்.


பிஷப்ஸ் மாநாட்டின் தலைவர் ஜோஸ் ஓர்னெலஸ் கூறுகையில், தங்களது அமைப்பு  இன்னும் அதுபோன்ற பட்டியலைப் பெறவில்லை.விரைவில் அது தங்களுக்குக் கிடைக்கும் என்று நம்புவதாகவும் கூறினார். மேலும் அவர், போர்த்துகீசிய பேராயர்கள் மார்ச் 3ம் தேதி கூடி எதிர்கால துஷ்பிரயோகங்களைத் தடுக்க மிகவும் திறமையான மற்றும் பொருத்தமான வழிமுறைகளை செயல்படுத்த பரிசீலிப்பார்கள் என்றும் கூறினார். இதற்கு பதிலளித்த மருத்துவர் அவர்கள் விரைவில் அதைப் பெறுவார்கள் எனக் குறிப்பிட்டார். 


இந்த விவகாரத்தில் பதிலளித்த போப் பிரான்சிஸ் கூறுகையில், “அந்த நபர்கள் யாராக இருப்பினும் அவர்கள் தேவாலயத்தில் எந்த பொறுப்புகளையும் வகிக்க முடியாது. அதே சமயம் அவர்களது குற்றம் நிரூபிக்கப்படும் வரை தேவாலயம் எந்தவிதமான விச் ஹண்டிங்கையும் நடத்தாது” எனவும் அவர் கூறினார். 


போப் பிரான்ஸிஸ் கருத்துக்கு பதிலளித்த மருத்துவர் ஸ்ட்ரெக்ட் இந்த விஷயத்தில் நீதித்துறை அதிகாரிகளுடன் ஒத்துழைக்க வேண்டிய தார்மீக மற்றும் நெறிமுறைக் கடமை தேவாலயத்திற்கு இருப்பதாகக் கூறியுள்ளார். தேவாலயங்களில் இதுபோன்ற அதிர்ச்சிகரமான எண்ணிக்கையிலான குற்றங்கள் போர்ச்சுகல் குறித்து பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியாவை பொருத்தவரை குழந்தைகள் பாதுகாக்கும் கொள்கைகளின் ஓரு பகுதியாக உருவாக்கப்பட்டது தான் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 (The protection of children from sexual offense(POCSO) Act 2012). இந்த சட்டம் சுருக்கமாக போக்சோ சட்டம் என அழைக்கப்படுகிறது. மாநிலங்களவையில் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 10 தேதியும், மக்களவையில் மே மாதம் 22 தேதியும் நிறைவேற்றப்பட்டது, நவம்பர் 14-ஆம் தேதி அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்டு நடைமுறைக்கு வந்தது.


இச்சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு வரை குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடைபெறும் பொழுது ஐபிசி சட்டம் பிரிவு 375 கற்பழிப்பு, பிரிவு 354 பெண்ணின் அடக்கத்தை மீறுதல், பிரிவு 377 இயற்கைக்கு மாறான குற்றங்கள் எனும் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.