காஷ்மீரில் உள்ள பகல்ஹாமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் திடீரென பட்டப்பகலில் உள்ளே புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த 25 குடிமக்களும், நேபாளத்தைச் சேர்ந்த ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 26 அப்பாவி மக்களை தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியது.
பாகிஸ்தானுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக பல நடவடிக்கைகளை மேற்கொண்ட இந்தியா எப்போது பதில் தாக்குதலை நடத்தும் என்றே அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர். இந்த சூழலில் இந்தியா நேற்று நள்ளிரவு பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளது. ஒன்பது இடங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியிருந்தாலும், பஹாவல்பூர் பகுதியில் இந்தியா தாக்குதல் நடத்தியது மிக துணிச்சலான முடிவாக பார்க்கப்படுகிறது.
பஹாவல்பூர் மீது தாக்குதல் நடத்தியது ஏன் முக்கியத்துவம் பெறுகிறது ?
பயங்கரவாதிகளின் சொர்க்க பூமியாக பாகிஸ்தான் இருந்து வருகிறது. பாகிஸ்தானிலேயே, பயங்கரவாதிகளுக்கு சொர்க்கபூமியாக பார்க்கப்படும் இடம் என்றால், பஹாவல்பூர் தான். பஹவல்பூரில் உஸ்மான்-ஓ-அலி வளாகத்தைத் தலைமை இடமாகக் கொண்டு, தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது செயல்பட்டு வருவதாக நீண்ட காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது.
தீவிரவாதிகளின் சொர்க்க பூமி
ஜெய்ஷ்-இ-முகமது (Jaish-e-Mohammed) தீவிரவாத அமைப்புக்கு பின்னணியில் பாகிஸ்தானின் உளவு அமைப்பு மறைமுகமாக நிதி உதவிகள் மற்றும் பயிற்சிகளை வழங்கி வருகிறது. இந்தப் பகுதியில் தான், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புக்கு ஆட்சேர்ப்பு, நிதி திரட்டுதல் போன்ற பணிகளில் பயங்கரவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோன்று இங்கிருந்து சர்வதேச போதை கடத்தல் கும்பலும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தீவிரவாதத்திற்கு நிதிகளை திரட்ட இந்த போதை பொருட்களை விற்பனை செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்புடன் நடைபெறும் தீவிரவாத பயிற்சி
ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் நிறுவனர் மௌலானா மசூத் அசார், பஹவல்பூரில் பலத்த பாதுகாப்புடன் வசித்து வருவதாகவும் நம்பப்படுகிறது. இங்கு உறுப்பினர்களாக சேருபவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் சுமார் 500க்கு மேற்பட்டோர் பயிற்சி எடுக்கும் வசதிகள் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தடை செய்யப்பட்ட அமைப்பாக இருக்கும் ஜெய்ஷ்-இ-முகமது தொடர்ந்து ஆக்டிவாக பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
இந்தியாவை குறி வைத்து தொடர்ந்து தாக்குதல்களை இந்த தீவிரவாத அமைப்பு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியா மீது நடைபெறும் பல்வேறு தீவிரவாத தாக்குதலுக்கு, நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் இந்த தீவராத அமைப்பு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் தான் இந்தப் பகுதியை மையமாக வைத்து, இந்தியா தாக்குதலை நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.