ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவை ரத்து செய்த மத்திய அரசின் நடவடிக்கை செல்லும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது. 


உச்சநீதிமன்றம்:


அந்த தீர்ப்பில், ஜம்மு காஷ்மீரை இந்திய ஒன்றியத்தில் இணைப்பதை எளிதாக்குவதற்கான சட்டப்பிரிவு 370 என்பது ஒரு தற்காலிக விதி என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் ஜம்மு காஷ்மீரில் தேர்தலை நடத்துமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 2019 ஆம் ஆண்டில் ஜம்மு மற்றும் காஷ்மீரில் இருந்து லடாக் யூனியன் பிரதேசத்தை பிரிக்கும் மத்திய அரசின் முடிவினை இந்த தீர்ப்பின் மூலம் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 


தலைவர்கள் கருத்து


ஜம்மு காஷ்மீர் முதல்வராக இருந்த ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் தலைவர் குலாம் நபி ஆசாத், தீர்ப்பு "வருத்தமானது மற்றும் துரதிர்ஷ்டவசமானது" என்றும், ஜம்மு காஷ்மீர் மக்கள் இந்த தீர்ப்பால் மகிழ்ச்சியடையவில்லை, ஆனால் எங்களுக்கு வேறு வழி இல்லை எனவே தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.




மெகபூபா முப்தி:


மக்கள் ஜனநாயக கட்சி, மெகபூபா முப்தி இது தொடர்பாக கூறுகையில், "ஜம்மு-காஷ்மீர் மக்கள் நம்பிக்கையை இழக்கவோ, கைவிடவோ போவதில்லை. மரியாதை மற்றும் கண்ணியத்துக்கான எங்கள் போராட்டம் தொடரும். இது எங்களுக்கான பாதையில் இந்த தீர்ப்பு என்பது முடிவல்ல" என்று அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூறினார்.


கரண்சிங்:


காங்கிரஸ் தலைவரும், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் மஹாராஜாவுமான ஹரி சிங்கின் மகனுமான கரண் சிங் கூறுகையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒரு பிரிவினருக்கு இந்த தீர்ப்பால் மகிழ்ச்சி இல்லை. எனது உண்மையான அறிவுரை என்னவென்றால், ஜம்மு காஷ்மீர் மக்கள் இந்த தீர்ப்பை ஏற்க வேண்டும். தவிர்க்க முடியாதது. உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினை எண்ணி இப்போது தேவையில்லாமல் தங்கள் தலையை சுவரில் அடிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.


இப்போது எனது ஆலோசனை என்னவென்றால், ஜம்மு காஷ்மீர் மக்கள் அடுத்த தேர்தலில் போராடுவதற்கு தங்கள் ஆற்றலைத் திருப்ப வேண்டும். மக்கள் எந்த எதிர்மறையான எண்ணத்தையும் வளர்த்துக்கொள்வதற்குப் பதிலாக இப்போது தேர்தலுக்காக ஊக்குவிக்கப்பட வேண்டும்," என்றும் அவர் கூறினார்.


இந்த தீர்ப்பு தொடர்பாக  பிரதமர் நரேந்திர மோடி, இன்றைய தீர்ப்பு வெறும் சட்டத் தீர்ப்பு மட்டுமல்ல; இது நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும், பிரகாசமான எதிர்காலத்திற்கான வாக்குறுதியாகவும், வலிமையான, ஒன்றுபட்ட இந்தியாவைக் கட்டியெழுப்புவதற்கான நமது கூட்டு உறுதிப்பாட்டின் சான்றாகவும் உள்ளது" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


உமர் அப்துல்லா:


ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான உமர் அப்துல்லா கூறுகையில், "இந்த தீர்ப்பு எனக்கு ஏமாற்றம் அளிக்கவில்லை என கூறமுடியாது. அதேநேரத்தில்  நாங்கள் மனம் தளரவில்லை. போராட்டம் தொடரும்," மேலும், "பாஜகவிற்கு இங்கு வர பல தசாப்தங்கள் ஆனது. நாங்களும் நீண்ட தூரத்திற்கு தயாராக இருக்கிறோம். " என தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.