Noida Protest Today: நொய்டாவில் ஊதியத்தை உயர்த்தி தர வலியுறுத்தி தனியார் நிறுவன ஊழியர்கள் முன்னெடுத்த போராட்டம், கலவரமாக வெடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கலவரமாக வெடித்த போராட்டம்
ஊதியத்தை உயர்த்தி வழங்கக் கோரி மூன்று நாட்களாக நடைபெற்று வந்த ஊழியர்களின் போராட்டம், கலவரமாக மாறிய சம்பவம் நொய்டாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீ வைப்பு சம்பவங்கள், கல் வீச்சு மற்றும் இரண்டு தரப்புக்கும் இடையேயான மோதல்கள் ஆகியவற்றால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் குழுவின் பெரும்பகுதியினர் சாலைகளை மறித்ததால், டெல்லி - நொய்டா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக தொழிலாளர்கள் கூட்டத்தை கலைக்க, போலீசார் லேசான தடியடி நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.
சாலையில் இறங்கி போராட்டம்
பல்வேறு தொழிற்சாலைகள் அமைந்துள்ள அந்த பகுதியின் குறிப்பாக செக்டார் 1 மற்றும் செக்டார் 84 ஆகிய இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் குறைந்தது 2 வாகனங்களை தீயிட்டு எரித்ததாக கூறப்படுகிறது. இதனால் தொழிற்சாலை பகுதியில் பதற்றமான சூழல் தொற்றிக்கொள்ள, பெரும்பாலான தொழிலாளர்கள் சாலையில் இறங்கி முழக்கங்களை எழுப்பி போக்குவரத்தை இடைமறித்துள்ளனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பதற்றமான சூழலை தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், தொழிலாளர்கள் குழுக்களுடன் பேச்சுவார்த்தையும் தீவிரமாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வேலைக்கு செல்லும் நேரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதால் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றுள்ளன.
பிரச்னை என்ன?
நொய்டாவின் அந்த பகுதியில் உள்ள பல தொழிற்சாலைகளின் ஊழியர்களும் ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செக்டார் 62ல் தொடங்கிய போராட்டம் அடுத்தடுத்து அந்த பகுதி முழுவதும் பரவியுள்ளது. அவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகள் ஏற்கப்படும் என மாவட்ட அதிகாரிகள் மற்றும் தொழில்நிறுவன பிரதிநிதிகள் வாக்குறுதி அளித்துள்ளனர். ஆனால், 24 மணி நேரம் கடந்தும் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாததால் இந்த வன்முறை வெடித்துள்ளது.
குவிக்கப்பட்ட போலீசார்..
டெல்லி மற்றும் நொய்டாவைச் சேர்ந்த ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றமும் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதிகப்படியான வாகனங்கள் குவிந்து இருந்ததால், உடனடியாக அங்கு சூழல் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இதனால் டெல்லி - நொய்டா எல்லை, DND மேம்பாலம் உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில் அதிகப்படியான குழப்பமான சூழல் நிலவியது. போராட்டக்காரர்கள் சில்லா எல்லையருகே உள்ள நொய்டா இணைப்புச் சாலையை முழுவதுமாக மறித்துள்ளதால், டெல்லியிலிருந்து நொய்டாவிற்கான போக்குவரத்து கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிர பேச்சுவார்த்தை
இதனிடையே, போராட்டங்களைத் தொடர்ந்து அமைதியை நிலைநாட்டும் நோக்கில் நொய்டா ஆணையத்தில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாத்தல், கூடுதல் நேரப் பணிக்கு இரட்டிப்பு ஊதியம் உறுதி செய்வது, போனஸ் வழங்குவது, வாராந்திர விடுப்பு வழங்குவது மற்றும் பணியிடப் பாதுகாப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து அதிகாரிகள் விவாதித்தனர்.
நொய்டா மாவட்ட ஆட்சியர் மேதா ரூபம், தொழிலாளர்களின் வசதிக்காக ஒரு பிரத்யேக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். அனைத்துப் புகார்களும் உடனடியாகக் கவனிக்கப்படும் எனவும் உறுதியளித்தார். சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் பொருட்டு, கௌதம் புத்த நகர் ஆணையரகத்தின் கீழ் உள்ள தொழிற்பேட்டைகள் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
