Trump PM Modi: ”ட்ரம்ப் பொய்யா சொல்றாரு.. மோடி போன் பண்ணவே இல்லை” - இந்தியா விளக்கம்
Trump PM Modi: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம், பிரதமர் மோடி பேசவே இல்லை என இந்திய அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Trump PM Modi: ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக மோடி உறுதி அளித்தார் என்ற, ட்ரம்பின் கருத்துக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்தியா திட்டவட்டமாக மறுப்பு:
பிரதமர் நரேந்திர மோடியுடன் சமீபத்தில் தொலைபேசியில் பேசியதாகவும் , அப்போது ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று பிரதமர் உறுதியளித்ததாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. அத்தகைய உரையாடல் எதுவும் நடக்கவில்லை என்றும் விளக்கமளித்துள்ளது.
வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எரிசக்தி பிரச்னையில் அமெரிக்காவின் கருத்து குறித்து, நாங்கள் ஏற்கனவே ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளோம், அதை நீங்கள் குறிப்பிடலாம். தொலைபேசி உரையாடலைப் பொறுத்தவரை, பிரதமருக்கும் அதிபர் ட்ரம்பிற்கும் இடையே எந்த விவாதமும் நடக்கவில்லை” என தெரிவித்தார்.
மோடியை சந்திக்கும் ட்ரம்ப்?
பிரதமர் மோடியுடனான தனது உறவு மற்றும் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு உறவு குறித்து டிரம்ப் வெள்ளை மாளிகையில் விரிவாக பேசிய நிலையில், இந்திய அரசாங்கம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது. பிரதமர் மோடியை ஒரு சிறந்த மனிதர் என்றும் இந்தியாவை மிகப்பெரிய நாடு என்றும் அழைத்த ட்ரம்ப், இரு தலைவர்களும் சமீபத்தில் பேசியதாகவும், மலேசியாவில் நடைபெறவிருக்கும் ஆசியான் உச்சிமாநாட்டின் போது சந்திக்கக்கூடும் என்றும் தெரிவித்தார். ஆனால், இதுகுறித்து இந்தியா தரப்பில் இதுவரை எந்த கருத்தும் கூறப்படவில்லை.
பொய்யான தகவலை பரப்பிய ட்ரம்ப்
அதேநேரத்தில் தான், ”ரஷ்யாவிடம் இருந்து இனி கச்சா எண்ணெயை வாங்க மாட்டோம் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். இதனை உடனடியாக நிறுத்த முடியாது. சற்றே நீளமான செயல்முறைகள் அடங்கிய நடவடிக்கை. ஆனால் விரைவிலேயே நிறுத்தப்படும். புதின் உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்த வேண்டும் என்பதே எங்களது இலக்காக உள்ளது. இந்தியா தனது கொள்முதலை நிறுத்தினால் போரை முடிவுக்கு கொண்டு வருவது எளிதாகிவிடும். அதேநேரம் போர் முடிந்தால் அவர்கள் மீண்டும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கலாம்” என பேசினார். ஆனால், பிரதமர் மோடி - ட்ரம்ப் இடையே அத்தகைய தொலைபேசி உரையாடல் எதுவும் நிகழவில்லை என இந்திய அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.
இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
ட்ரம்பின் பேச்சு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், “இந்தியா எண்ணெய் மற்றும் எரிவாயுவை கணிசமாக இறக்குமதி செய்யும் நாடு. நிலையற்ற எரிசக்தி சூழ்நிலையில் இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பது எங்கள் நிலையான முன்னுரிமையாக இருந்து வருகிறது. எங்கள் இறக்குமதிக் கொள்கைகள் இந்த நோக்கத்தால் முழுமையாக வழிநடத்தப்படுகின்றன.
நிலையான எரிசக்தி விலைகள் மற்றும் பாதுகாப்பான விநியோகங்களை உறுதி செய்வது எங்கள் எரிசக்தி கொள்கையின் இரட்டை இலக்குகளாகும். இதில் எங்கள் எரிசக்தி ஆதாரங்களை பரந்த அளவில் அடிப்படையாகக் கொண்டது மற்றும் சந்தை நிலைமைகளை பூர்த்தி செய்ய பொருத்தமான வகையில் பன்முகப்படுத்துதல் ஆகியவை அடங்கும்
அமெரிக்காவைப் பொறுத்தவரை, நாங்கள் பல ஆண்டுகளாக எங்கள் எரிசக்தி கொள்முதலை விரிவுபடுத்த முயன்று வருகிறோம். இது கடந்த பத்தாண்டுகளில் சீராக முன்னேறி வருகிறது. தற்போதைய நிர்வாகம் இந்தியாவுடனான எரிசக்தி ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆர்வம் காட்டியுள்ளது. விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என விளக்கமளித்தது.





















