மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மோதிலால் நேரு சாலையில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தின் லேண்ட்லைன் எண்ணுக்கு போன் செய்த அடையாளம் தெரியாத நபர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
குறிவைக்கப்படுகிறாரா நிதின் கட்கரி..?
நேற்று இரவு கட்கரியின் அலுவலக ஊழியர்கள், போன் அழைப்பை எடுத்துள்ளனர். அந்த மர்ம நபர், தனது விவரங்களைப் பகிர்ந்து கொள்ளவில்லை. மேலும், அமைச்சரிடம் பேச வேண்டும் என மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி பேசுகையில், "போன் செய்த நபர் இந்தியில் பேசினார். நான் அமைச்சரிடம் பேச விரும்புகிறேன் அமைச்சரை மிரட்ட விரும்புகிறேன் என கூறியுள்ளார். பின்னர், அழைப்பை துண்டித்துவிட்டார். போன் செய்தவர்களின் விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
குற்றம் சாட்டப்பட்டவர் லேண்ட்லைன் எண்ணுக்கு அழைத்தார். எனவே அவரை பிடிக்க அவரது எண்ணைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம். விசாரணை நடந்து வருகிறது" என்றார்.
தொடரும் கொலை மிரட்டல்கள்:
இந்த விவகாரம் குறித்து அமைச்சர் அலுவலகம் டெல்லி போலீஸாரிடம் புகார் அளித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாக்பூரில் உள்ள நிதின் கட்கரியின் அலுவலகத்திற்கு இரண்டு முறை இதுபோன்ற மிரட்டல் விடுக்கும் வகையிலான அழைப்புகள் வந்தது கவனிக்கத்தக்கது.
இது தொடர்பாக விசாரணை நடத்த தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) அதிகாரிகள் குழு, கடந்த 9ஆம் தேதி நாக்பூருக்குச் சென்றது. கொலைக் குற்றவாளி ஜெயேஷ் பூஜாரி என்ற காந்தாவால் இந்த அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. பயங்கரவாத தடுப்புச் சட்டமான யுஏபிஏவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கர்நாடகாவின் பெலகாவியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டவர் ஜெயேஷ் பூஜாரி.
அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பது தொடர் கதையாகி வருகிறது. சமீபத்தில் கூட, தெற்கு மும்பையில் உள்ள சர் எச்.என். ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் போன் செய்து, அங்கு வெடிகுண்டு வெடிக்க வைக்க போவதாக மிரட்டினார்.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில், ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு போன் செய்து தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த நகைக்கடைக்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரதமர், உ.பி. முதலமைச்சரை கொலை செய்துவிடுவேன் எனக் கூறி பிரபல ஊடகம் ஒன்றுக்கு மாணவர் ஒருவர் மெயில் அனுப்பியிருந்தார்.