முறைகேடாக கட்டணம் வசூலித்த சுங்கச்சாவடிகள்.. சுளுக்கெடுத்த NHAI
அதிக கட்டணம் வசூல் செய்வதாக சுங்கச்சாவடிகள் மீது புகார்கள் குவிந்து வரும் நிலையில், சுங்கச் சாவடிகளில் கட்டண வசூலில் முறைகேடாக ஈடுபட்ட 14 முகமைகளுக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தடை விதித்துள்ளது.

இந்தியாவின் சிறந்த கட்டமைப்பு வசதிகளில் நெடுஞ்சாலையும் ஒன்று.இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் நெடுஞ்சாலைகள் சிறப்பாக இருக்கிறது. மத்திய அரசு நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் விதமாக சுங்கச்சாவடிகளை அமைத்து வாகன ஓட்டிகளிடம் சுங்கக்கட்டணம் வசூலித்து வருகிறது.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து சுங்கக்கட்டணங்களை மத்திய அரசு அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் தொடர்ந்து வேதனையை ஏற்படுத்தி வருகிறது. இதனால், சில நேரங்களில் சுங்கச்சாவடிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
சுங்கச்சாவடிகள் மீது குவியும் புகார்கள்:
அதிக கட்டணம் வசூல் செய்வதாக சுங்கச்சாவடிகள் மீது புகார்கள் குவிந்து வரும் நிலையில், சுங்கச் சாவடிகளில் கட்டண வசூலில் முறைகேடாக ஈடுபட்ட 14 முகமைகளுக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தடை விதித்துள்ளது.
உத்தரபிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள அட்ராய்லா ஷிவ் குலாம் சுங்கச்சாவடியில் உ.பி சிறப்பு பணிக்குழு சோதனை நடத்தியது. முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தவறிழைத்த முகமைகளுக்கு 'விளக்கம் கேட்டு நோட்டீஸ்களை' வழங்கியது.
அதிரடி நடவடிக்கை:
கட்டண வசூல் நிறுவனங்கள் சமர்ப்பித்த பதில்கள் திருப்திகரமாக இல்லை. ஒப்பந்தத்தின் விதிகளை மீறியதற்காக முகமைகள் இரண்டு வருட காலத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளன. ஒப்பந்தத்தை மீறியதற்காக ரூ.100 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள 'செயல்திறன் பத்திரங்கள்' பறிமுதல் செய்யப்பட்டு பணமாக்கப்பட்டு வருகின்றன.
தடை செய்யப்பட்ட முகமைகளால் நிர்வகிக்கப்பட்டு வந்த சுங்கச்சாவடிகளின் தடையற்ற செயல்பாட்டை உறுதி செய்வதற்காக, ஆணையத்தால் நியமிக்கப்படும் புதிய முகமையிடம் சுங்கச்சாவடிகளை ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலை நடவடிக்கைகளில் மிக உயர்வான தரங்களைப் பின்பற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உறுதிபூண்டுள்ளது. எந்தவொரு குறைபாடும் பூஜ்ஜிய சகிப்புத்தன்மையுடன் தீர்க்கப்படும். தவறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்கள் கடுமையான அபராதங்களுடன் நெடுஞ்சாலை திட்டங்களில் இருந்து தடை செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: IPL 2025: ஐபிஎல், எந்த குழுவில் எந்த அணி? யாருக்கு யாருடன் 2 போட்டிகள்? பரிசுத்தொகை? மைதானங்கள், கேப்டன்கள்