தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி நிலவரப்படி, ரூ. 22,808 கோடி மதிப்பிலான 15 ரயில்வே திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ரூ. 22 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய ரயில்வே திட்டங்கள்:

நாடாளுமன்ற மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தர்மர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், இவற்றில் 9 புதிய வழித்தடங்கள், 3 அகலப்பாதை மாற்றம், 3 இரட்டை வழித்தடம் ஆகியவை அடங்கும் என்றார். மொத்தம் 1700 கி.மீ. தூரத்திற்கான இந்தப் பணிகளில் 665 கி.மீ. தூரம் உள்ள பணிகள், மார்ச் 2025 வரை ரூ.7591 கோடி செலவில் நிறைவடைந்துள்ளன என்று அவர் தெரிவித்தார்.

கடந்த 2009-2014 ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கான ஓதுக்கீடு ஆண்டுக்கு ரூ.879 கோடியாக இருந்த நிலையில், 2025-26 நிதியாண்டில் இந்தத் தொகை ரூ.6626 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

மிக முக்கியமான ரயில்வே உள்கட்டமைப்பு பணிகளை நிறைவேற்றுவதற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தாமதமடைவது காரணமாக உள்ளது என்று கூறிய அஸ்வினி வைஷ்ணவ், மொத்தம் 4315 ஹெக்டேர் நிலம் தேவைப்படும் நிலையில், 1038 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இன்னும் 3277 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது என்றும் கூறினார்.

தமிழ்நாட்டுக்கு அடிச்சது ஜாக்பாட்:

நிலம் கையகப்படுத்துவதை துரிதப்படுத்த தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்பு தேவைப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். நிலம் கையகப்படுத்துவதில் பிரச்சனை இருப்பதால் திண்டிவனம் - திருவண்ணாமலை புதிய வழித்தடம் (71 கி.மீ), அத்திப்பட்டு - புத்தூர் புதிய வழித்தடம் (88 கி.மீ), மொரப்பூர் - தர்மபுரி (36 கி.மீ), மன்னார்குடி- பட்டுக்கோட்டை (41 கி.மீ.), தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை (52 கி.மீ.) ஆகிய வழித்தடப் பணிகள் தாமதமாகியுள்ளன என்று அவர் கூறினார்.

அத்திப்பட்டு - புத்தூர் புதிய வழித்தடம், மன்னார்குடி- பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை ஆகியவற்றுக்கு நிலம் எதுவும் இதுவரை கையகப்படுத்தப்படவில்லை என்று அவர் தெரிவித்தார். விழுப்புரம்- திண்டுக்கல் இரட்டை வழித்தடம், மதுரை - மணியாச்சி - தூத்துக்குடி இரட்டை வழித்தடம், மணியாச்சி - நாகர்கோயில் இரட்டை வழித்தடம், செங்கல்பட்டு - விழுப்புரம் மற்றும் தாம்பரம் - செங்கல்பட்டு 3வது வழிதடம், மயிலாடுதுறை – திருவாரூர் - காரைக்குடி அகல ரயில்பாதை உட்பட 19 பணிகள் முழுமையாக அல்லது பகுதியளவு முடிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் கூறினார்.