நாட்டின் தொழிற்சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தொழிலாளர் சட்டம் கடந்த 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 


தொழில் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணிச்சூழல், ஊதியம், தொழில்துறை உறவுகள், சமூக பாதுகாப்பு ஆகிய நான்கு முக்கியமான விதிகள் அடங்கிய புதிய தொழிலாளர் சட்டம் நிறைவேற்றப்பட்டு மூன்றாண்டுகள் ஆன நிலையிலும், இன்னும் அமல்படுத்தப்படாமல் உள்ளது. 


இந்த சட்டம் அமலுக்கு வரும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட மிகப் பெரிய பொருளாதார மாற்றங்களாக இவை கருதப்படுகிறது. புதிய தொழிலாளர் சட்டத்தில் பல முக்கிய அம்சங்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், தொழிலாளர்களின் விடுப்பு தொடர்பான புதிய விதி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


அதன்படி, 30 நாட்களுக்கு மேல் விடுப்பு எடுக்காத ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்குவது கட்டாயமாகிறது. விடுப்பு எடுக்காக ஊழியர்களுக்கு அதற்கு இணையான ஊதியத்தை அந்தந்த நிறுவனங்கள் வழங்க புதிய தொழிலாளர் சட்டம் வழிவகுக்கிறது.


தொழில் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணிச்சூழல், 2020, விதிகளின்படி, " திறன் அடங்கிய பணி, திறன் தேவையில்லாத பணி, உடல் வேலை அடங்கிய பணி என எந்த மாதிரியான பணி செய்வதற்கும் பணியமர்த்தப்படுபவரே ஊழியர் என வரையறுக்கப்படுகிறது. இந்த ஊழியர் என்ற வரையறைக்குள் நிர்வாக பணி அல்லது மேற்பார்வை பணி செய்பவர்கள் வரமாட்டார்கள்.


நிர்வாகப் பணியாளர்கள் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிர்வாகத்திற்கு பொறுப்பானவர்கள். அதே சமயம், மேற்பார்வை ஊழியர்கள் மற்ற ஊழியர்களின் பணியை மேற்பார்வையிடும் பொறுப்பு உடையவர்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


வருடாந்தர விடுமுறையைப் பெறுதல், அதை அடுத்தாண்டுக்கு எடுத்து செல்லுதல், விடுப்புக்கு இணையான பணத்தை பெறுதல் தொடர்பான நிபந்தனைகள் மேல்குறிப்பிடப்பட்டு விதியின் 32ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரிவு 32(vii)இன் கீழ், ஒரு ஊழியர் வருடாந்திர விடுப்பை அடுத்த காலண்டர் ஆண்டில் பயன்படுத்த வழிவகை செய்கிறது. ஆனால், கடந்தாண்டில் பயன்படுத்தாத 30 நாட்கள் விடுப்பை மட்டுமே அடுத்தாண்டில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


ஆண்டின் இறுதியில் பயன்படுத்தாத வருடாந்திர விடுப்பு 30 நாள்களுக்கு மேல் இருந்தால், பணியாளர், அந்த விடுப்புகளுக்கு பதில் ஊதியம் பெற்று கொள்ளலாம்.