மொழி விவகாரத்தில் கண்டனங்கள் குவிந்ததை தொடர்ந்து, நியூ அஷ்யூரன்ஸ் நிறுவனம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளது. ஊழியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை மூலம் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் மன்னிப்பு கோரியுள்ளது.
”மன்னிப்பு கோருகிறோம்”
நியூ அஷ்யூரன்ஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “உள்ளூர் மொழிகள் மற்றும் கலாசாரங்களை மதிக்கும் ஒரு மாறுபட்ட மற்றும் அமைதியான பணியிடத்தை மேம்படுத்துவதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். நமது மகத்தான நாட்டின் பரப்பளவு முழுவதும் உள்ள செழுமையான கலாச்சார மரபு மற்றும் மொழியியல் வகைகளுடன் நாங்கள் முழுமையாக இணைந்துள்ளோம் மற்றும் மரியாதை கொண்டுள்ளோம். தற்செயலாக, உங்கள் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால், அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரச்னை என்ன?
நியு இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் மண்டல அலுவலகங்களில் இருந்து தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்படும் அறிக்கைகள் இந்தியில் தான் இருக்க வேண்டும். அவற்றுக்கு தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பப்படும் பதில்களும் இந்தியில் தான் இருக்க வேண்டும். அன்றாடப் பணிகளில் தொடங்கி அலுவலக இதழ் வரை அனைத்தும் இந்தியில் தான் இருக்க வேண்டும் என்று நியு இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு அதன் தலைமை அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பியது. இந்த செயலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். அந்த நிறுவனம் ஊழியர்கள் இடையே இந்தியை திணிக்க முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்:
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அநீதியானது. இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இந்தி பேசாத மக்களையும், இந்தி பேசாத ஊழியர்களையும் அவமதித்ததற்காக நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் நீர்ஜா கபூர் மன்னிப்பு கேட்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கண்டன அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
ராமதாஸ் கண்டனம்:
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் நடவடிக்கை என்பது அப்பட்டமான இந்தித் திணிப்பு ஆகும். இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள அலுவலகங்களிலும் இந்தி தான் ஆட்சி செய்ய வேண்டும் என்று நியு இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் கூறுவது அப்பட்டமான மொழித்திணிப்பும், மொழித்திமிரும் ஆகும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்து இருந்தார். இதேபோன்று தமிழத்தை சேர்ந்த அரசியல் கட்சிகள் பலவும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் சுற்றறிக்கைக்கு கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தன. இதையடுத்து தான், தங்களது செயலுக்கு அந்த நிறுவனம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளது. இதனை அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.