உடல்நலத்திற்கு ஆரோக்கியமளிக்கும் உணவுகளில் ஒன்றான முட்டைக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் காலாவதி தேதி கட்டாயம் என உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. 

ஆரோக்கியமான வாழ்வுக்கு முட்டை

ஊட்டச்சத்து உணவுகள் தான் ஆரோக்கியமான வாழ்விற்கும், உடல்நலத்திற்கும் அடிப்படையாக அமைகின்றன. அப்படியான நிலையில் முட்டைகள் நம் உணவில் முக்கிய பங்கு வகிக்கிறது. கோழி, வாத்து, காடை ஆகியவற்றின் முட்டைகள் பிரதானமாக நம் அனைவராலும் உண்ணப்படுகிறது.

முட்டையில் உயர்தர புரதம் அதிகம் உள்ளது. இதனை தவிர வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகளவில் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதால் முட்டை கட்டாயம் ஊட்டச்சத்து நிபுணர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது. இத்தகைய முட்டையை பச்சையாகவோ, அவித்தோ அல்லது ஆம்லேட், ஆப்பாயில் என பல வகைகளிலும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்த சத்துணவுத் திட்டத்தின் கீழ் வாரத்தில் குறிப்பிட்ட நாட்களுக்கு முட்டை வழங்கும் திட்டம் 1989ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்தியாவின் பிற மாநிலங்களிலும் இது பின்பற்றப்படுகிறது.  

காலாவதி தேதி கட்டாயம்

இப்படியான நிலையில் உத்தரப்பிரதேச அரசு, 2026ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் ஒரு சட்டத்தை அமலுக்கு கொண்டு வருகிறது. அதன்படி முட்டை உற்பத்தியாளர்கள் தங்கள் முட்டைகளில் காலாவதி தேதி மற்றும் கோழி முட்டையிட்ட தேதியை குறிப்பிட வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தேதி குறிப்பிடப்படாத முட்டைகள் அழிக்கப்படும் அல்லது மனிதர்கள் உபயோகிக்க உகந்ததல்ல என தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

முட்டைகளின் சேமிப்புக் காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முட்டைகள் வெளிவந்த பிறகு அவை சுமார் 30 டிகிரி செல்சியஸ் வெளிப்புற வெப்பநிலையில் சேமிக்கப்பட வேண்டும். இரண்டு வாரங்கள் மட்டுமே முட்டைகளை பயன்படுத்த வேண்டும்.  2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையில் சேமிக்கப்படும் முட்டைகள் ஐந்து வாரங்கள் வரை பயன்படுத்தப்படலாம். 

உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரை ஆக்ரா மற்றும் ஜான்சியில் தான் தலா ஒரு முட்டை குளிர்பதன கிடங்கு உள்ளது. காய்கறிகளுக்கு வெவ்வேறு விதமான பதப்படுத்தக்கூடிய வெப்பநிலை தேவை என்பதால் அவற்றுடன் முட்டையை நாம் சேமிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல சமயங்களில் முட்டைகளுக்கான விதிகள் சரிவர பயன்படுத்தப்படுவதில்லை என்ற நிலையில் மக்கள் அதனை வாங்கி பயன்படுத்தி உடல்நல பிரச்னைகளை சந்திக்கின்றனர். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிப்பதால் இந்த நடவடிக்கையானது மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகேஷ் மேஷ்ராம் தெரிவித்துள்ளார்.