புதிய FASTag விதிகள் நாளை முதல் அமலுக்கு வர இருக்கின்றன. குறைவான பேலன்ஸ் வைத்திருப்பவர்களுக்கும், காலதாமதமாக FASTag கட்டணம் செலுத்துபவர்களுக்கும், முடக்கப்பட்ட FASTag கணக்கை பயன்படுத்துபவர்களுக்கும் கூடுதல் அபராதம் விதிக்க வழிசெய்யும் விதிகள் நாளை முதல் அமலாக இருக்கின்றன.
புதிய FASTag விதிகள்:
தேசிய நெடுஞ்சாலை கட்டணம் (விகிதங்கள் மற்றும் வசூல் நிர்ணயம்) விதிகள், 2008 இன் கீழ் NHAI தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது, 1,000 அல்லது அதற்கு மேற்பட்ட பிளாசாக்கள் இந்தியா முழுவதும் சுமார் 45,000 கிமீ தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளுக்கு சுங்கவரி வசூலிக்கின்றன. எட்டு கோடிக்கும் அதிகமான பயனர்கள் மற்றும் சுமார் 98 சதவிகித பயனாளர்கள் வீதத்துடன், FASTag ஆனது இந்தியாவில் சுங்கவரி வசூலில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், FASTag கட்டணத்தை சீராக்கும் நோக்கில் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்துறை அமைச்சகத்துடன் இணைந்து FASTag விதிகளில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளன.
எதற்கு எல்லாம் அபராதம்?
இதனால், குறைவான பேலன்ஸ் வைத்திருப்பவர்களுக்கும் முடக்கப்பட்ட FASTag கணக்கை பயன்படுத்துபவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட உள்ளது.
குறிப்பிட்ட வாகனம் சுங்கச்சாவடியைக் கடப்பதற்கு முன்பு 60 நிமிடங்களுக்கும் மேலாக FASTag செயலற்ற நிலையில் இருந்து, அதைக் கடந்து சென்ற 10 நிமிடங்கள் வரை செயலற்ற நிலையில் இருந்தால், கட்டண பரிவர்த்தனை நிராகரிக்கப்படும்.
வாகனம் டோல் ரீடரைக் கடந்து செல்லும் நேரத்திலிருந்து 15 நிமிடங்களுக்கு பின்னர், டோல் பரிவர்த்தனை வசூலானால் FASTag பயனர்கள் கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும். சுங்க கட்டண பரிவர்த்தனை தாமதமாகி, பயனரின் FASTag கணக்கில் போதுமான பேலன்ஸ் இல்லை என்றால், சுங்கச் சாவடி ஆபரேட்டர் பொறுப்பேற்கப்படுவார்.
பயனர்கள் பயணம் செய்வதற்கு முன் FASTag கணக்கில் போதுமான பேலன்ஸ் இருப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும். முன்னதாக, பயனர்கள் தங்கள் FASTag-ஐ டோல் சாவடியில் ரீசார்ஜ் செய்து கூட கடந்து செல்ல முடிந்தது.
இதையும் படிக்க: BNS different from IPC: புதிய குற்றவியல் சட்டம் Vs இந்திய தண்டனை சட்டம் - அறிய வேண்டிய முக்கிய விதிகள்