நீட் தேர்வு மோசடி விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பிகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விஸ்வரூபம் எடுக்கும் நீட் முறைகேடு விவகாரம்: கடும் அழுத்தத்தை தொடர்ந்து நீட் முறைகேடுகள் தொடர்பான விசாரணையை சிபிஐயிடம் மத்திய அரசு ஒப்படைத்தது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அதிரடியாக சோதனையிட்ட சிபிஐ அதிகாரிகள் பலரை கைது செய்தனர்.
இந்த நிலையில், பீகாரில் 13 பேரை காவலில் எடுத்துள்ளது சிபிஐ. காவலில் எடுத்து விசாரிக்க பாட்னா உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் ராகேஷ் ரஞ்சன் ஏற்கனவே, சிபிஐ காவலில் உள்ளார்.
அவருடன் சேர்த்து மற்றவர்களையும் நேருக்கு நேர் வைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க உள்ளனர். நிதிஷ் குமார், அகிலேஷ் குமார், சிக்கந்தர் பிரசாத் யாத்வேந்து, ஆயுஷ் குமார், பிட்டு குமார், அமித் ஆனந்த், அசுதோஷ் குமார், ரோஷன் குமார், அனுராக் யாதவ், அபிஷேக் குமார், அவதேஷ் குமார், ஷிவ்நந்தன் குமார், ரீனா குமாரி உள்ளிட்ட 13 பேர் சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதிரடி காட்டும் சிபிஐ: ஹசாரிபாக் ஒயாசிஸ் பள்ளி முதல்வர் அஹ்சனுல் ஹக் மற்றும் துணை முதல்வர் இம்தியாஸ் ஆலம் உட்பட பல சந்தேக நபர்கள் ஏற்கனவே சிபிஐ காவலில் உள்ளனர். நீட் தேர்வு நாளில் அவர்களுக்கு உதவியதாகக் கூறப்படும் இந்தி நாளிதழ் பத்திரிகையாளர் ஜமாலுதீன் என்பவரும் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், தன்பாத்தில் கைது செய்யப்பட்ட அமன் சிங்கை சிபிஐ காவலில் எடுத்துள்ளது. நீட் தேர்வு கேள்வித்தாள் லீக்கான விவகாரத்தில் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயால் தவறாக கைது செய்யப்பட்ட கங்காதர் குண்டே என்பவருக்கு டெல்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது.
கடந்த 2024ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 5 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் சுமார் 24 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதனிடையே ஜூன் 14ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான 4ஆம் தேதி இரவே தேர்வு முடிவுகளும் வெளியாகின.
இதில் வழக்கத்துக்கு மாறாக 67 பேர் முதல் மதிப்பெண் பெற்றனர். சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது, ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு என நீட் இளநிலைத் தேர்வில் ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பின.