வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி, அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.
ராமர் கோயில் திறப்பு விழா தொடர் பேசுபொருளாகி வரும் நிலையில், ராமர் குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜிதேந்திர அவாத் தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. பகவான் ராமரே அசைவம்தான் எனக் கூறிய அவர், "ராமர் பகுஜன்களாகிய எங்களுக்கு சொந்தமானவர்.
"பகுஜன் சமூகத்தை சேர்ந்த ராமர்"
விலங்குகளை வேட்டையாடி உண்பது அவரின் வழக்கம். அவர், பகுஜன் சமூகத்தை சேர்ந்தவர். ராமரை முன்மாதிரியாகக் கொண்டு அனைவரையும் சைவ உணவு உண்பவர்களாக மாற்ற முயற்சிக்கின்றனர். ஆனால், ராமர் சைவ உணவு உண்பவர் அல்ல, அசைவ உணவு உண்பவர். 14 வருடங்கள் காட்டில் தங்கியவர். அவர் சைவ உணவுக்கு எங்கே போவார்?" என்றார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்த நிலையில், சரத் பவார் அணியில் இருந்து வருகிறார் ஜிதேந்திர அவாத். ராமர் குறித்த அவரின் கருத்து சர்ச்சையானதை அடுத்து அஜித் பவாரின் ஆதரவாளர்கள், நேற்று இரவு, மும்பையில் உள்ள அவாத்தின் வீட்டிற்கு வெளியே முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று மீண்டும் அவரது வீட்டுக்கு சென்ற போராட்டக்காரர்கள், அவாத்தின் போஸ்டரில் செருப்பை வீசி எதிர்ப்பை தெரிவித்தனர். இதை தொடர்ந்து, அவரின் வீட்டில் காவல்துறை குவிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏ ராம் கதம், "இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த அவாத் மீது, அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு பேரணியாக சென்று வழக்கு பதிவு செய்ய உள்ளோம்.
"இந்துக்களை யார் வேண்டுமானாலும் கேலி செய்யலாம்"
ராமரின் அனைத்து பக்தர்களும் ஜிதேந்திர அவாத் மீது போலீஸ் வழக்குப் போடுவார்கள். பால் தாக்கரே உயிருடன் இருந்திருந்தால் இன்றைய சாம்னா நாளிதழ் ராமரை அசைவம் என்று சொன்னவர்களை கடுமையாக பேசியிருக்கும். ஆனால் இன்றைய யதார்த்தம் என்ன? ராமரைப் பற்றி யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.
இந்துக்களை யார் வேண்டுமானாலும் கேலி செய்யலாம். அவர்கள் கவலைப்படுவதில்லை. பனி போல் குளிர்ச்சி அடைகின்றனர். ஆனால், தேர்தல் வந்தால் இந்துத்துவா பற்றி பேசுவார்கள்" என்றார்.
முன்னதாக, நேரு, காந்தி பற்றி பேசிய அவாத், "யார் என்ன சொன்னாலும், காந்தியாலும் நேருவாலும் தான் நமக்கு சுதந்திரம் கிடைத்தது என்பதே உண்மை. 1947இல் காந்தி படுகொலை செய்யப்படவில்லை. ஆனால், அவர் மீதான முதல் தாக்குதல் 1935 இல் நடந்தது. இரண்டாவது தாக்குதல் 1938ஆம் ஆண்டும் மூன்றாவது தாக்குதல் 1942 இல் நடந்தது.
எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் ஏன் அவரை பல முறை தாக்கினார்கள். ஏனென்றால் காந்தி ஒரு வியாபாரி. OBC (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) வகுப்பை சேர்ந்தவர். இவ்வளவு பெரிய சுதந்திரப் போராட்டத்தின் தலைவர் ஓபிசி வகுப்பை சேர்ந்தவர் என்பதை அவர்களால் (ஆர்எஸ்எஸ்) ஏற்று கொள்ள முடியவில்லை" என்றார்.