அடுத்த மாத தொடக்கத்தில், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், தனது கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் பா.ஜ.க. பல நடவடிக்கைகளை எடுத்தது. அந்த வகையில், பீகார் முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான நிதிஷ் குமார், I.N.D.I.A கூட்டணியில் இருந்து விலகி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார்.


அதன் தொடர்ச்சியாக, உத்தர பிரதேசத்தில் ராஷ்டிரிய லோக் தள் கட்சியும் I.N.D.I.A கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணியில் இணைந்தது. வட மாநிலங்களை தொடர்ந்து, நாட்டின் பிற பகுதிகளில் கூட்டணியை பலப்படுத்த பாஜக தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது.


கூட்டணியை பலப்படுத்தும் பாஜக:


அந்த வகையில், ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம், ஜன சேனா கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, ஒடிசாவில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைக்க பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.


இதற்காக, இரு கட்சிகளின் தலைமையும் தங்கள் மூத்த தலைவர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இரு கட்சிகளிடையே உள்ள வேறுபாடுகளை களைய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தாலும், கூட்டணி குறித்து இரு கட்சிகளும் தங்களின் தெளிவான நிலைாட்டை அறிவிக்கவில்லை.


இதுகுறித்து பிஜு ஜனதா தள கட்சி துணை தலைவர் தேபி பிரசாத் மிஸ்ரா கூறுகையில், "வரும் 2036ஆம் ஆண்டு, ஒடிசாவுக்கு மாநில அந்தஸ்து கிடைத்து 100 ஆண்டுகள் நிறைவாகிறது. எனவே, அதற்குள் முக்கியமான சாதனைகளை படைக்க பிஜு ஜனதா தள கட்சியும் முதலமைசச்சர் நவீன் பட்நாயக்கும் உறுதியாக உள்ளனர்.


I.N.D.I.A கூட்டணிக்கு சவாலா?


ஒடிசா மக்கள் மற்றும மாநில நலனை நோக்கிய பயணத்தில் தேவையான அனைத்தையும் பிஜு ஜனதா தள கட்சி செய்யும்" என்றார். முன்னாள் மத்திய பழங்குடி நலத்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜுவல் ஓரம், இதுகுறித்து பேசுகையில், "தேர்தலில் தனித்து போட்டியிட ஒடிசா மாநில பாஜக விரும்புகிறது. ஆனால், கூட்டணி விவகாரத்தில் மத்திய தலைமையே முடிவு எடுக்க வேண்டும்" என்றார்.


பாஜகவும் பிஜு ஜனதா தள கட்சியும் கூட்டணி அமைப்பது இது முதல்முறை அல்ல. கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் பாஜக கூட்டணியில் இருந்த பிஜு ஜனதா தளம், கடந்த 2009ஆம் ஆண்டு கூட்டணியில் இருந்து விலகியது. ஒடிசாவில் பாஜகவும் பிஜு ஜனதா தளமும் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தியுள்ளது. ஆனால், கூட்டணியில் பிரச்னை வெடிக்க கூட்டணி முறிந்தது. 15 ஆண்டு காலத்திற்கு பிறகு, மீண்டும் கூட்டணி அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.