National Press Day 2022: இந்திய பத்திரிகை கவுன்சில், சட்டப்பூர்வ நிறுவப்பட்டதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16 ஆம் தேதி நாடு முழுவதும் தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில்தான் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா செயல்படத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாள் இந்தியாவில் சுதந்திரமான மற்றும் பொறுப்பான பத்திரிகை இருப்பதைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூண் என ஊடகங்கள் அறியப்படுகின்றன என்பது நடைமுறை உண்மையாகும்.
ஒரு நாட்டில் பாதகமான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், பத்திரிகையாளர்கள் சமூகத்தின் கண்ணாடியாக, உண்மையை பிரதிபலித்து வருகின்றனர். பத்திரிகை சுதந்திரம் மற்றும் சமூகத்தின் மீது பத்திரிகை மற்றும் பத்திரிகையாளார்கள் கொண்டிருக்கும் பொறுப்புகளின் அடையாளமாக, இந்த நாள் அதாவது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16 ஆம் தேதி நாட்டில் பத்திரிகை சுதந்திரத்தையும் குறிக்கிறது.
தேசிய பத்திரிக்கை தின வரலாறு
1966 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதியில் தான், இந்தியப் பத்திரிகை அறிக்கையின் தரத்தைக் கண்காணிக்க இந்தியப் பிரஸ் கவுன்சில் நிறுவப்பட்டது. 1956 ஆம் ஆண்டில், இந்தியாவின் முதல் பத்திரிகை ஆணையம் பத்திரிகை நெறிமுறைகள் மற்றும் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க ஒரு குழுவை தயார் செய்தது. அந்த குழுவின் நோக்கமே அனைத்து பத்திரிகைகளின் நம்பகத்தன்மையைப் பேணுவதற்காகவும்,மேலும், அனைத்துப் பத்திரிகைச் செயல்பாடுகளும் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவால் கண்காணிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பத்திரிகைச் சுதந்திரம் மற்றும் பத்திரிகைகள் குறித்து தலைவர்கள் கூறியுள்ளது,
பத்திரிக்கை சுதந்திரம் என்பது எந்த நாடும் கைவிட முடியாத ஒரு விலைமதிப்பற்ற பாக்கியம் - மகாத்மா காந்தி
சுதந்திரமான பத்திரிகை ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்று - நெல்சன் மண்டேலா
ஒரு திறந்த சந்தையில் உண்மையையும் பொய்யையும் தனது மக்களை தீர்மானிக்க பயப்படும் ஒரு தேசம் அதன் மக்களைப் பற்றி பயப்படும் ஒரு தேசம் ஆகும் - ஜான் எஃப். கென்னடி
உலகத்தை மாற்றுவதே உங்கள் நோக்கம் என்றால், பத்திரிகை என்பது உடனடி குறுகிய கால ஆயுதம் என்று நான் இன்னும் நம்புகிறேன் - டாம் ஸ்டாப்பர்ட்.
இன்று நாடு முழுவதும் உள்ள பத்திரிகை அல்லது இதழியல் என்பது தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்து செயலாற்றி வருகிறது. சாதாரண எளிய மக்களின் குரலாக ஒலிக்கும் பத்திரிகைகள், ஒரு துறையை மட்டும் சிறப்பாக பிரதிபலிக்கும் பத்திரிகைகள், அதாவது விளையாட்டு, தொழில்நுட்பம், ஆன்மீகம், துப்பறிதல் என வகைபடுத்திக் கொண்டே போகலாம். இந்தியாவில் பத்திரிகைகள் தொடங்கப்பட்டபோது துறை சார்ந்த சிறப்பு பத்திரிகைகள் கிடையாது. ஆனால், இன்றைக்கு இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அனைத்து வகையான பத்திரிகைகள் செயல்பட்டு வருகின்றன. தேசிய பத்திரிகை தினத்தினை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் உள்ள பத்திரிகை மற்றும் செய்தி நிறுவனங்களுக்கு தலைவர்கள் உட்பட பொதுமக்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.