நேஷனல் ஹெரால்டு அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை இயக்குநரக அலுவலர்கள் இன்று சீல் வைத்துள்ளனர். பண மோசடி தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது டெல்லியில் உள்ள யங் இந்தியா நிறுவனத்தின் ஹெரால்டு ஹவுஸ் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 


நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தும் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தை யங் இந்தியா நிறுவனம் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது.


 






இதையடுத்து, இவ்வழக்கு தொடர்பாக சோனியா காந்தியிடம் விசாரணை நடத்தப்பட்டதையடுத்து டெல்லியில் உள்ள பத்திரிகையின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை இயக்குநரகம் சோதனை நடத்தியது. 


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு செல்லும் சாலைகளில் காவல்துறையினர் தடுப்பு போட்டுள்ளனர். 


இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டர் பக்கத்தில், "ஹெரால்ட் ஹவுஸ், பகதூர் ஷா ஜாபர் மார்க் ஆகியவற்றில் நடத்தப்பட்ட சோதனை இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான இந்திய தேசிய காங்கிரஸுக்கு எதிரான தொடர்ச்சியான தாக்குதலின் ஒரு பகுதியாகும்.


 






மோடி அரசுக்கு எதிராக பேசுபவர்களுக்கு எதிரான இந்த பழிவாங்கும் அரசியலை வன்மையாக கண்டிக்கிறோம். நீங்கள் எங்களை அமைதிப்படுத்த முடியாது" என பதிவிட்டுள்ளார்.


"டெல்லி போலீஸ், காங்கிரஸ் தலைமையகத்திற்கு செல்லும் சாலையை மறிப்பது விதிவிலக்காக இல்லாமல் வழக்கமாகிவிட்டது! ஏன் அப்படி செய்தார்கள் என்பது மர்மமாக உள்ளது" என்றும் ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்டுள்ளார்.


நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் சோனியா காந்தி மற்றும் அவரது மகனும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி இருவரிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண