மும்பையில் பள்ளி ஒன்றில் உள்ள லிப்டில் சிக்கி 26 வயது ஆசிரியை உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு மும்பை மலாடியில் உள்ள சிஞ்சோலி பண்டரில் செயின்ட் மேரிஸ் ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை அன்று இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 






சம்பவத்தை விவரித்த காவல்துறை தரப்பு, "மதியம் 1 மணியளவில் இரண்டாவது மாடியில் உள்ள பணியாளர் அறைக்கு செல்வதற்காக ஜெனல் பெர்னாண்டஸ் என்ற ஆசிரியை ஆறாவது மாடியில் காத்திருந்தார். லிப்டின் கதவு மூடப்படாததால், அவரது பை சிக்கியுள்ளது. இருப்பினும், லிப்ட் கீழே சென்றதால் அவரின் தலை நசுங்கியது. இவை அனைத்தும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது" என தெரிவித்தது.


பள்ளி ஊழியர்கள் அவருக்கு உதவ விரைந்தனர். அவர் வெளியே இழுக்கப்பட்ட போதிலும், பலத்த காயமடைந்திருந்தார். தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


"முதற்கட்ட விசாரணையின் போது, ​​விபத்தின் மூலம் மரணத்திருப்பதாக அறிக்கையை பதிவு செய்துள்ளோம். ஏதேனும், முறைகேடு நடந்திருந்தால், அதற்கேற்ப நடவடிக்கை எடுப்போம்" என 11ஆவது மண்டல காவல் துணை ஆணையர் விஷால் தாக்கூர் தெரிவித்தார்.






பள்ளியில் லிப்டில் சிக்கி ஆசிரியை உயிர்ந்திருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியைக்கு பதில் மாணவ, மாணவிகள் எவரேனும் சிக்கி இருந்தால் விவகாரம் மோசமாக இருக்கும். இருப்பினும், இது விபத்தாக இருக்கும் பட்சத்தில், லிப்ட் போன்றவை முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை ஆராய வேண்டும். 


அந்த பள்ளியில் மட்டும் அல்லாமல், அனைத்து பள்ளிகளிலும் முறையான வசதிகள், பாதுகாப்பு நெறிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை அடிக்கடி கண்காணிக்க வேண்டும். இது தொடர்பாக, பள்ளி கல்வித்துறை கடுமையான விதிகளை அமல்படுத்தி அவை முறைப்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.