மும்பை, அகமதாபாத் நகரங்களுக்கு இடையே அமைக்கப்பட்டு வரும் புல்லட் ரயிலுக்கு பாலம் அமைக்கும் பணிகள் 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு முடிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார். 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் 12 ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் புல்லட் ரயில் திட்டம், 2028 ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புல்லட் ரயில் திட்டம் - Bullet Train Project
ரயில் சேவையை நவீனப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், பல்வேறு மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத்தை காட்டிலும் அதி வேகமாக செல்லக்கூடிய புல்லட் ரயிலானது பயணிகளின் பயண நேரத்தை மேலும் குறைக்கும்.
எனவே, புல்லட் ரயில் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. கடந்த 2009ஆம் ஆண்டு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், அதிக வேக ரயில்களை கொண்டு வருவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
புது அப்டேட் கொடுத்த ரயில்வே அமைச்சர்:
இதை தொடர்ந்து, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து மகாராஷ்டிரா தலைநகர் மும்பை வரை செல்லும் வகையிலான புல்லட் ரயில் திட்டத்துக்கு பிரதமர் மோடி கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அடிக்கல் நாட்டினார். ஜப்பான் நாட்டின் தொழில்நுட்ப உதவியுடனும் நிதி உதவியுடனும் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், புல்லட் ரயில் தொடர்பாக புதிய தகவல் ஒன்றை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பகிர்ந்துள்ளார். புல்லட் ரயிலுக்கு பாலம் அமைக்கும் பணிகள் 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு முடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Full Span Launching Method மூலம் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் வீடியோவை வெளியிட்டுள்ளார் அஸ்வினி வைஷ்ணவ். 508 கிலோ மீட்டர் தூர புல்லட் ரயில் திட்டத்தை தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (NHSRCL) செயல்படுத்தி வருகிறது.
300 கி.மீ நீளமுள்ள மேற்கட்டமைப்பில், 257.4 கி.மீ நீளம் FSLM மூலம் கட்டப்பட்டதாக NHSRCL தெரிவித்துள்ளது. இதில், 14 ஆற்று பாலங்கள் அடங்கும். அதோடு, 37.8 கி.மீ தூரம் ஸ்பான் பை ஸ்பான் (SBS) Method மூலம் அமைக்கப்பட்டுள்ளது. 0.9 கி.மீ தூரத்திற்கு எஃகு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. புல்லட் ரயில் திட்டத்திற்காக 383 கி.மீ நீளமான தூண் பணி, 401 கி.மீ நீளமான அடித்தள பணி, 326 கி.மீ நீளமான கர்டர் வார்ப்பு பணிகளும் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.