முல்லைப் பெரியாறு அணை: 120 வருட பழமையான அணைக்கு ஆபத்தா? உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டக் கோரிய வழக்கில், மத்திய அரசு, தமிழ்நாடு மற்றும் கேரள மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு ஸ்திரத்தன்மை குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துவரும் நிலையில், தன்னார்வ தொண்டு நிறுவனமான 'சேவ் கேரளா பிரிகேட்' (Save Kerala Brigade) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவானது, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் வி.வி. கிரி, ஹரிஸ் பீரன் ஆகியோர் அணையின் தன்மை குறித்தும், அதை சுற்றி வாழ்ந்து வரும் மக்களின் அச்ச உணர்வு குறித்தும் அமர்வு முன்பு எடுத்துரைத்தனர். முல்லைப் பெரியாறு அணையின் கீழ்ப்பகுதியில் சுமார் 10 மில்லியன் மக்கள் வசித்து வருவதாகவும், அணையின் நிலை குறித்து அவர்கள் அச்சத்தில் இருப்பதால் புதிய அணை கட்டப்படுவது அவசியம் என்றும் அவர்கள் வாதாடினர்.

அதற்கு, தற்போதுள்ள அணையை வலுப்படுத்த சில வழிமுறைகளை கையாளலாம் என தலைமை நீதிபதி கூறினார். மேலும் உண்மையில் என்ன பிரச்சினை? என்றும், மற்றொரு அணை கட்டப்பட்டால் குத்தகை செல்லாது என தமிழ்நாடு கூறுமா? என்றும் அமர்வு கேள்வி எழுப்பியது. தற்போதுள்ள அணை களிமண்ணை (surky) பயன்படுத்தி பழமையான முறையில் கட்டப்பட்டிருப்பதாகவும், மேலும், இப்பகுதியில் நில அதிர்வு சமீபகாலமாக அதிகரித்திருப்பதாகவும் வழக்கறிஞர் கிரி கூறினார். அதற்கு, இந்த அணை பழமையான அணைகளில் ஒன்று எனவும், 120 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறது என்றும் அமர்வு குறிப்பிட்டது.
அப்போது மனுதாரர் தரப்பில், முல்லை பெரியாறு அணையை கட்டிய பொறியாளர்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களால் எதிர்பார்க்கப்பட்ட ஆயுட்காலத்தைவிட அந்த அணை அதிக நாட்கள் இருப்பதாகவும், தற்போது 121ஆம் ஆண்டில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இதுபோன்ற பழமையான அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் என்னவாகும்? என மக்கள் அச்சமடைவதாகவும், அவர்களின் வேதனையையும் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள் அமர்வு, அணையின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் புதிய அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மதிப்பிட ஒரு நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, மத்திய அரசு, தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகள், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.





















