கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மைத் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 


முன்னதாக ஜூலை 14ஆம் தேதி கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு முதன்முதலாக குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்நிலையில், கேரள மாநிலம், கண்ணூரில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.


 






அதே நேரத்தில் குரங்கு அம்மை நோய் பாதிப்புக்கு உள்ளான நபரின் உடல் நிலை சீராக இருப்பதாகவும் கேரள அமைச்சர் தெரிவித்திருந்தார். முன்னதாக குரங்கு அம்மை பரவலைத் தடுக்க கேரள அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை முழு ஒத்துழைப்பு வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.


மேலும், கேரளாவில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து அனைத்து மாநிலங்களையும் மருத்துவ வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. 


தமிழ்நாட்டில் குரங்கம்மை


இந்நிலையில், தமிழ்நாட்டில் தற்போது வரை குரங்கம்மை நோய் தொற்று யாருக்கும் ஏற்படவில்லை என்றும், தமிழ்நாட்டுக்கு வரும் அனைத்து பன்னாட்டு விமானங்களும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


பிரிட்டனில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு முதன்முதலில் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது உலகம் முழுவதும் பல  நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.


முதலில் ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், பிரிட்டன் போன்ற நாடுகளில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு அதிகரித்தது. 


உலக சுகாதார நிறுவனம் கோரிக்கை


முன்னதாக குரங்கு அம்மை கொரோனா போன்று உலக அளவில் பெருந்தொற்றாக மாறும் வாய்ப்பு இல்லை என்றும், குரங்கு அம்மை நோய் என்பது சர்வதேசப் பரவல் என்பதை நம்ப வேண்டாம் என்றும் உலக சுகாதார நிறுவனம் கோரி இருந்தது.



குரங்கம்மைத் தொற்று நோயினால் உலகம் முழுவதும் 400க்கும் மேற்பட்டோர் இதுவரை பாதிக்கப்பட்டிருந்தாலும், இதுவரை உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை. எனினும், குரங்கம்மை நோய் என்பது தொற்று நோய் என்பதால் சர்வதேச நாடுகள் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.


மக்கள் கவலைப்படும் அளவுக்கு குரங்கம்மை வேகமாகப் பரவும் நோயல்ல என்றாலும் மெதுவாக இது சமூகப் பரவலாக மாறக்கூடிய அபாயம் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு இதனைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தயாராக வேண்டும் என்று உலக சுகாதார மையம் அறிவுறுத்தியிருந்தது.