அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக கடந்த திங்கட்கிழமை பதவியேற்றார். இந்நிலையில், ட்ரம்ப்பின் நண்பரான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா செல்ல திட்டமிடப்பட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Continues below advertisement

பிரதமர் மோடி அமெரிக்கா செல்வது குறித்து பேச்சு

ட்ரம்ப் பதவியேற்பு விழாவை ஒட்டி 4 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அதில் ஒரு பகுதியாக, பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இந்திய பயணத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், இந்தியா மற்றும் சீனாவுக்கு விரைவில் பயணம் மேற்கொள்ளும் ஆவரை தன்னுடைய ஆலோசகர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனினும், தேதிகள் குறித்து உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இந்தியாவில் நடைபெறும் குவாட் உச்சி மாநாடு

அதே வேளையில், இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டிற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட பல நாட்டு தலைவர்கள் வருகை தர வேண்டி உள்ளது. அந்த நேரத்தில், மோடி மற்றும் ட்ரம்ப்பின் சந்திப்பு நிகழும் சூழல் ஏற்படும். ஆனால், குவாட் மாநாட்டிற்கான தேதியையும் இந்தியா இன்னும் முடிவு செய்யவில்லை.

Continues below advertisement

இது ஒருபுறமிருக்க, இவை எல்லாவற்றிற்கும் முன்னதாகவே, அடுத்த மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு நடவடிக்கைகள் தொடர்பான உச்சிமாநாட்டில், இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொள்ள உள்ளனர். அப்போது இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.