PM Modi Independence Day Speech: சுதந்திர தின உரையில் முன்னாள் பிரதமர் நேருவின் நாட்டிற்கான பங்களிப்பை மோடி பாராட்டினார்.

நேருவை பாராட்டிய பிரதமர் மோடி:

பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து தனது தொடர்ச்சியான 12வது சுதந்திர தின உரையை நிகழ்த்தினார். இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக தேசியக் கொடியை ஏற்றினார். தொடர்ந்து இந்திய விமானப்படையின் இரண்டு எம்ஐ-17 ஹெலிகாப்டர்களில் ஒன்று மூவர்ணக் கொடியையும் மற்றொன்று ஆபரேஷன் சிந்தூர் கொடியையும் தாங்கிய மலர் இதழ்களை தூவின. இதையடுத்து பேசுகையில் இந்திய அரசியலமைப்பை வலுப்படுத்துவதில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பங்களிப்பைப் பிரதமர் மோடி பாராட்டினார்.  வழக்கமாக இன்றைய இந்தியாவில் நடக்கும் பெரும்பான்மையான பிரச்னைக்கு காங்கிரஸ் பிரதமர்களான நேரு மற்றும் இந்திரா தான் காரணம் என மோடி குற்றம்சாட்டுவார். ஆனால், இன்று பாராட்டி பேசி இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

”யார மிரட்டுறீங்க”

பாகிஸ்தான் ராணுவ தளபதி இந்தியாவிற்கு ஆணு ஆயுத மிரட்டல் விடுத்தது குறித்து பேசுகையில், சிந்து நதி நீர் ஒப்பந்தம் இந்திய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. இந்தியாவின் ஆறுகள் எதிரி நாட்டிற்கு நீர்ப்பாசனம் செய்து கொண்டிருந்தன, அதே நேரத்தில் நமது சொந்த விவசாயிகள் தண்ணீரை இழந்தனர். இப்போது, இந்தியாவின் நீர் பங்கின் மீதான உரிமை இந்தியாவிற்கும் அதன் விவசாயிகளுக்கும் மட்டுமே சொந்தமானது. விவசாயிகளின் நலன்கள் மற்றும் தேசிய நலன்களில் சமரசம் செய்வது எங்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாதது. 

இந்தியா இனி அணு ஆயுத அச்சுறுத்தலை பொறுத்துக்கொள்ளாது. எதிரி மேலும் ஏதேனும் தவறான சாகசங்களைச் செய்யத் துணிந்தால், இந்திய ஆயுதப் படைகள் அவர்களுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கும். ரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாயக்கூடாது என்று இந்தியா முடிவு செய்துள்ளது" என பிரதமர் மோடி விளக்கமளித்துள்ளார்.

”நினைவிகு அப்பாற்பட்ட தாக்குதல்”

ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக பேசுகையில், “எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் கையாள்வதில் நாம் ஒரு புதிய இயல்பை ஏற்படுத்தியுள்ளோம். பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னால் இருந்தவர்களை அவர்களின் கற்பனைக்கும் எட்டாத வகையில் தண்டித்த நமது துணிச்சலான வீரர்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். பாகிஸ்தானின் தூக்கம் இன்னும் கலைந்து கொண்டிருக்கிறது. பாகிஸ்தானில் நமது ஆயுதப் படைகளால் ஏற்பட்ட அழிவு மிகவும் பரவலாக இருப்பதால், ஒவ்வொரு நாளும் புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆபரேஷன் சிந்தூர் நமது படைகளின் வீரம் மற்றும் துல்லியத்திற்கு ஒரு சக்திவாய்ந்த சான்றாகும். பல தசாப்தங்களாக காணப்படாத ஒரு முன்னுதாரணத்தை நமது படைகள் அமைத்துள்ளன. அவர்கள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தை எதிரி பிரதேசத்திற்குள் தாக்கி பயங்கரவாத தலைமையகத்தை தூசியாக மாற்றினர்” என பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் பேசினார்.