கொரோனா தொற்று கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மகாராஷ்ட்ரா, கர்நாடகம், ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தீவிரமாக பரவிவருகிறது. மகாராஷ்ட்ராவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியிலும் இரவு நேர ஊரடங்கு மிக கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது.


குஜராத்தில் 20 நகரங்களில் ஊரடங்கு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலம் திருப்பதியில் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தொடர்ந்து கொரோனா அதிகரித்து வருவதையடுத்து, பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினர்.





நேற்று ஒரு நாள் மட்டும் புதிய உச்சமாக நாடு முழுவதும் 1.26 லட்சம் நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கு முந்தைய நாள் 1.15 லட்சம் நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.


இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுடனும் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையில் கொரோனா பரவல் அதிகரிப்பு, தடுப்பு நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்த பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இந்த ஆலோசனைக்கு பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளதாகவுகம் தகவல்கள் வெளியாகியுள்ளது.