கேரளாவை சேர்ந்த மாடல் அழகியும் அவரது தோழியும் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் அன்சி கபீர்.இவரது தோழி அஞ்சனா  ஷாஜன். இவர்கள் இருவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைப்பெற்ற கேரள அழகிப்போட்டியில் பங்கேற்றுள்ளனர். அதில் அன்சி கபீர் முதலிடமும், அஞ்சனா இரண்டாம் இடமும் பிடித்தனர். அதன் பிறகு நடைந்த தென்னிந்திய அழகிப்போட்டியில் பங்கேற்ற அன்சி கபீர் அதிலும் மகுடம் சூடினார். அன்சி மற்றும் அஞ்சனா இருவரும் மாடலிங் துறையில் கலக்கி வந்த நிலையில் , தங்களது ஆண் நண்பர்களுடன் இணைந்து ஃபோட்டோ ஷூட் நடத்த திட்டமிட்டதாக தெரிகிறது. அதன்படி தங்களுக்கு சொந்தமான ஃபோர்ட்  ஃபிகோ என்னும் காரில் கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்றுள்ளனர். அப்போது நிலை தடுமாறிய கார் அங்குள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே அன்சி மற்றும் அஞ்சனா ஆகிய இருவருமே உயிரிழந்தனர். மேலும் உடன் இருந்த மற்ற இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு , அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.






இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தடயவியல் துறை நிபுணர்களும் இந்த விபத்து தொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர்.முதற்கட்டமாக அங்குள்ள பொதுமக்களிடம் நடத்திய விசாரணையில் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதாக தெரிவித்துள்ளனர். இதன் அடுத்தடுத்த விசாரணையை முடுக்கியுள்ளனர் போலிஸார். அன்சி மற்றும் அஞ்சனா இருவருமே சமூக வலைத்தளங்கள் மிகுந்த ஆக்டிவாக இருப்பவர்கள். அதன் படி அன்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட இறுதி பதிவும் மிகுந்த வைரலாகி வருகிறது. தனது இறப்பை முன்பே கணித்தவர் போல , “இது போவதற்கான நேரம் “ என ஒரு காட்டுப்பகுதியில் அன்சி நடந்து செல்வது போன்ற வீடியோவை பகிர்ந்துள்ளார். இதற்கு கீழே அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.







அன்சி உயிரிழந்த செய்தியை கேட்ட அன்சியின் தாய் , அதனை தாங்கிக்கொள்ள முடியாமல் விஷ மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் தற்போது நலமுடன் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மாடலிங் கனவுகளை சுமந்துகொண்டு , சாதனை படைக்க வேண்டும் என பயணித்த இரண்டு இளம் பெண்களின் அகால மரணம் கேரள பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.