IRAN Indian Guidelines: ஈரான் செல்லும் இந்திய குடிமக்களுக்கு, வெளியுறவு அமைச்சகம் சார்பில் பயண ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.


இந்திய குடிமக்களுக்கான பயண அறிவுரை


இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நாங்கள் பிராந்தியத்தில் சமீபத்திய பாதுகாப்பு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். ஈரானுக்கான அனைத்து அத்தியாவசிய பயணங்களையும் தவிர்க்குமாறு இந்திய நாட்டவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்போது ஈரானில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்கவும், தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரத்துடன் தொடர்பில் இருக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.






பாதுகாப்பான சூழல் அவசியம்


மேலும், “மேற்கு ஆசியாவில் பாதுகாப்பான சூழல் மோசமடைந்து வருவதில் நாங்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளோம். உரிய நபர்கள் அனைவரும் சேர்ந்த இந்த சூழலை கட்டுப்படுத்த வேண்டும் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என்ற எங்கள் அழைப்பை மீண்டும் வலியுறுத்துகிறோம். தற்போதைய மோதல் ஒரு பரந்த பிராந்திய சூழலாக மாறாமல் இருப்பது முக்கியம். பிரச்னைகளை பேச்சுவார்த்தை மற்றும் ராஜாங்க நடவடிக்கைகள் மூலம் தீர்க்க வேண்டும் என, இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரையும் வலியுறுத்துகிறோம்” எனவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


ஆசியப் பிராந்தியத்தில் அதிகரிக்கும் பதற்றம்:


காஸா மீதான தாக்குதலைத் தொடர்ந்து லெபனான் நாட்டில் உள்ள, ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா மற்றும் 7 தளபதிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த ஹிஸ்புல்லா அமைப்பின் ஆதரவு நிலைப்பாடு கொண்ட ஈரான், நேற்று இரவு இஸ்ரேல் மீது சுமார் 400 ஏவுகனைகளை கொண்டு தாக்கியது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல், ஈரான் நடத்திய தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. இதனால், எந்த நேரமும் இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், ஏற்கனவே ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீதும், இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், மேற்கு ஆசிய பிராந்தியம் முழுவதும் போர் பதற்றம் நிலவுகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. அதேநேரம், லெபனான் மற்றும் ஈரானுக்கு சீனா மற்றும் ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளன. தற்போதைய சூழல் தொடர்ந்தால், மூன்றாம் உலகப் போர் வெடிக்குமோ என்ற அச்சமும் சர்வதேச அரங்கில் தொற்றிக்கொண்டுள்ளது.