கேரளாவில் இஸ்லாமிய அமைப்பு ஒன்று பாலின அரசியல் என்ற தலைப்பில், மருத்துவ மாணவ, மாணவிகளை தனித்தனியே அமர வைத்து வகுப்பு எடுத்திருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது. ஒரே அரையின் நடுவே திரையின் மூலம் மாணவி, மாணவிகள் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு வகுப்பு எடுக்கப்பட்டு உள்ளது. கேரள சாஸ்த்ர சாகித்ய பரிஷத், கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI) உள்பட பல அமைப்புகள் தனித்தனியே வகுப்பு எடுக்கப்பட்டதற்கு கடுமையாக விமர்சனங்களை முன்வைத்துள்ளன.
Behind the rainbow flags: Understanding LGBTQIA from an Islamic perspective என்ற தலைப்பில் முஜாஹித் விஸ்டம் இஸ்லாமிய அமைப்பு வகுப்பு எடுத்துள்ளது. வகுப்பை நடத்திய குழுவின் அதிகாரி ஒருவர் சமூக ஊடகங்களில் புகைப்படத்தை வெளியிட்ட பிறகு இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இரு பாலினத்தவரையும் பிரித்து வகுப்பு எடுக்க வேண்டும் என இஸ்லாமிய அமைப்பு விரும்பியதாகவும் வகுப்புக்கான செலவை அமைப்பே ஏற்று கொண்டதாகவும் கல்லூரி பணியாளர் தெரிவித்துள்ளார். விமர்சனங்கள் எழுந்த பிறகு அதற்கு பதில் அளிக்கும் விதமாக ட்விட்டரில் பதிவிட்ட அமைப்பின் பணியாளர் ஒருவர், "கோபத்தை வெளிப்படுத்தி விட்டு செல்லுங்கள் குழுந்தைகளே" எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அவர், "வகுப்புகள் தனியார் இடத்தில் நடைபெற்றது" என்றார். இதுகுறித்து இந்திய மாணவர் கூட்டமைப்பின் மாநில தலைவர் அனுஸ்ரீ கூறுகையில், "உயர் கல்வியை பெற்றுள்ள மாணவர்கள் வகுப்பில் கலந்து கொள்வது கவலை அளிக்கும் விதமாக உள்ளது. இதை பெரும் சவாலாக கூட்டமைப்பு கருதுகிறது" என்றார்.
முற்போக்கு கருத்துகளை பரப்பி வரும் கேரள சாஸ்த்ர சாகித்ய பரிஷத் அமைப்பு, "திரை ஏன் வைக்கப்பட்டது என்று வகுப்பு எடுத்தவர்கள் விளக்கவில்லை. வகுப்பில் கலந்துகொண்டவர்களும் திரை தேவையா என்று கேள்வி கேட்கவில்லை" என கண்டித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்