அமெரிக்காவை சேர்ந்த  ஹிண்டன்பர்க் எனும் நிறுவனம் கடந்த 2 அண்டுகளாக, அதானி குழுமத்தின் முன்னாள் நிர்வாகிகள், அதிகாரிகள், பங்குதாரர்கள் என பலரிடம் கருத்துக்களைக் கேட்டு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. 


அதில், ”அதானி குழுமம் பங்குசந்தையில் ஏராளமான மோசடி வேலைகள் செய்துள்ளது. ரூ.17.80 லட்சம் கோடி மதிப்பிலான தொகைக்கு அதானி குழுமம் பங்குச்சந்தையில் மோசடி செய்து, பங்குகளை திருத்தியுள்ளது” என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 


இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அதானி குழுமம் மறுத்துள்ளது.  இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் இவ்விவகாரத்தில் 100 கேள்விகள் கொண்ட புத்தகத்தை வெளியிட்டார். கடந்த பிப்ரவரி மாதம் இவ்விவகாரத்தில் காங்கிரஸ் எழுப்பிய கேள்விகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.






சரிந்த செல்வாக்கு:


துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் முதலான தொழில்களில் ஈடுபட்டு வருகிறார் கெளதம் அதானி. 60 வயதான அவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த சில ஆண்டுகளாகவே உலக பணக்காரர்களின் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் கடந்த ஜனவரி இறுதியில் பின்னடவை சந்தித்தார்.


ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதன் விளைவாக, அதானி கழுமம் பெரிய அளவில் இழப்பை சந்தித்தது. பங்கு சந்தையில், 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக அதானி குழுமம் இழப்பை சந்தித்திருப்பதாக தகவல் வெளியானது.


இந்நிலையில், அதானி குழுமம் குறித்து ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்ட அறிக்கையின் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க நிபுணர்கள் அடங்கிய சிறப்பு விசாரணை குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது.


அதன்படி அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகள் தொடர் பாக அந்த குழு விசாரணை மேற்கொண்டு அதற்கான அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் அண்மையில் சமர்ப்பித்தது.


முதல் கட்டமாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அதானி குழுமம் அதுபோன்ற மோசடியில் ஈடுபட்டதற்கான எந்தவிதமான முகாந்திரமும் கண்டறியப்படவில்லை என நிபுணர் குழு தெரிவித்துள்ளது.


மீண்டார் அதானி:


உலகின் டாப் 20 பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் தொழிலதிபரும், அதானி குழும தலைவருமான கெளதம் அதானி மீண்டும் இணைந்துள்ளார். ப்ளூம்பெர்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் டாப் 20 பணக்காரர்களில் தற்போது 18-வது இடத்தில் உள்ளார் கெளதம் அதானி. மற்றொரு இந்தியரான முகேஷ் அம்பானி இதே பட்டியலில் 13-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.