ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, கார் விபத்தில் சிக்கி மயிரிழையில் உயிர் தப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று மதியம் அவர் சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது. ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் சங்கம் கிராமத்தில் விபத்து நடந்துள்ளது. 


விபத்தில் உயிர் தப்பிய முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி:


கருப்பு நிற ஸ்கார்பியோ காரில் மெகபூபா முப்தி சென்றுள்ளார். சங்கம் கிராமத்தை அடையும்போது, முன்னே சென்ற காருடன் மோதி விபத்துக்கு உள்ளானது. அப்போது, முப்தி காரின் முன்பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டது. கானாபால் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பாதிப்புக்கு உள்ளானவர்களை சந்திக்க முப்தி சென்றிருக்கிறார்.


 






அவர் விபத்தில் சிக்கியிருந்தாலும் காயம் எதுவும் இன்றி அவர் உயிர் தப்பியுள்ளார். ஆனால், அவரின் பாதுகாப்பு அதிகாரிக்கு விபத்தின் காரணமாக காயம் ஏற்பட்டுள்ளது. 


முப்தியின் உடல்நிலை குறித்து அவரது மகள் இல்திஜா வெளியிட்ட தகவலில், "இன்று அனந்த்நாக் செல்லும் வழியில் முப்தியின் கார் பயங்கர விபத்தில் சிக்கியது. கடவுளின் கருணையால் அவரும் அவரது பாதுகாப்பு அதிகாரிகளும் எந்தவிதமான காயங்களும் இன்றி உயிர் தப்பினர்" என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். பின்னர், விபத்தில் சிக்கிய தான் நலம் பெற வேண்டும் என பிரார்த்தனை மேற்கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் மெகபூபா முப்தி.





அதிகரிக்கும் சாலை விபத்துகள்:


இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் 2021ஆம் ஆண்டு 4,12,432 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1,53,972 பேர் மரணம் அடைந்துள்ளனர். 3,84,448 பேர் காயம் அடைந்துள்ளனர். 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2020-ம் ஆண்டு இந்தியாவில் 3,84,448 விபத்துகளில் 1,31,714 பேர் மரணம் அடைந்தனர். 3,48,279 பேர் காயம் அடைந்தனர்.


2021-ம் ஆண்டு தமிழகத்தில் 55,682 விபத்துகள் பதிவாகி உள்ளது. இதன்படி, அதிக விபத்துகள் பதிவான மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் 10,000 சாலை விபத்துகள் அதிகமாக நிகழ்ந்துள்ளன. 2021-ம் தமிழகத்தில் நடந்த சாலை விபத்துகளில் 15,384 பேர் மரணம் அடைந்தனர். இதன்படி அதிக மரணங்கள் பதிவான மாநிலங்களில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது. 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் 5,000 மரணங்கள் அதிகரித்துள்ளது.