மேகாலயாவின் என்.பி.பி சட்டமன்ற கட்சி தலைவராக கன்ராட் சங்மா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, மேகாலயாவில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோர இருக்கிறார் கன்ராட் சங்மா. 


கடந்த பிப்ரவரி 27ம் தேதி நடைபெற்ற தேர்தலில் 59 தொகுதிகளில் 26 இடங்களை கைப்பற்றி தேசிய மக்கள் கட்சி (NPP) வெற்றிபெற்றது. 60 தொகுதிகள் கொண்ட சட்டபேரவையில் குறைந்தது 31 இடங்களை பிடித்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும். இதையடுத்து, கன்ராட் சங்மா தனது தலைமையின் கீழ் புதிய அரசை அமைப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் ஆதரவு கோரினார் என்று அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார். 


மேகாலயாவில் ஐக்கிய ஜனநாயகக் கட்சி (UDP), 11 தொகுதிகளில் வெற்றி பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.காங்கிரஸ் மற்றும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் தலா 5 இடங்களில் வெற்றி பெற்றன. புதிதாக உருவாக்கப்பட்ட மக்கள் குரல் கட்சி (VPP) நான்கு இடங்களையும், மலை மாநில மக்கள் ஜனநாயகக் கட்சி (HSPDP) மற்றும் மக்கள் ஜனநாயக முன்னணி தலா 2 இடங்களையும் வென்றன. இரண்டு சுயேட்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர்.


இந்தநிலையில், மேகாலயா முதலமைச்சர் கான்ராட் சங்மா, இன்று மாநில ஆளுநர் பாகு சவுகானை சந்தித்து அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கான உரிமை கோர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை 11:30 மணிக்கு ராஜ் பவனுக்குச் சென்று ஆளுநரை சந்தித்து சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்தும் பேசியதாவும் தெரிவித்தனர்.