சோஷியல் மீடியா என்பது வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே இல்லாமல் சில நேரம் திறமைகளையும் உலகுக்கு அறிமுகம் செய்கிறது. சாலையோரம் பாடும் பாடகர்கள் இண்டர்நெட் வைரலாவதும், அதன் மூலம் சினிமாவில் பாடும் வாய்ப்பு கிடைப்பதும் நடந்திருக்கிறது. அதேபோல் பல நடிகர்களை உருவாக்கிக் கொடுத்துள்ளது இண்டர்நெட். அப்படியாக இப்போதெல்லாம் சில மாடல்களை கண்டுபிடித்துவிடுகிறது சமூக வலைதளம். 


மாடலிங் புகைப்படம் எடுக்கும் புகைப்படக்காரர்கள் பலர் தங்கள் கேமரா கண்களுக்கு சரியானவர்களை சாலைகளிலும் பொது இடங்களிலும் கண்டுபிடித்து விடுகின்றனர். அதன் மூலம் அவர்கள் பிரபலமாவதும் உண்டு. அப்படியான ஒரு வைரல் பெண்ணாக தற்போது இண்டர்நெட்டை கலக்கி வருகிறார் கிஸ்பு. கேரளாவில் சாலையில் சிக்னலில் நின்றுகொண்டு பலூன் விற்றுக்கொண்டிருந்த கிஸ்புவை சாலையில் சென்ற புகைப்படக்கலைஞர் அர்ஜூன் கிருஷ்ணன் பார்த்துள்ளார். 






 


அவரது புகைப்பட மூளைக்கு கிஸ்பு பலூர் விற்கும் சிறுமியாக தெரியவில்லை. ஒரு மாடலாக தெரிந்துள்ளார். உடனடியாக தன்னுடைய குழுவிடம் பேசிய புகைப்படக் கலைஞர் பலூன் சிறுமியை மாடலாக மாற்ற திட்டமிட்டுள்ளார்.  மேக்கப், ஹேர் ஸ்டைல், என ஆளையே மாற்றிய குழு விதவிதமான புகைப்படங்களை எடுத்து இணையத்தில் ஷேர் செய்தனர். அவ்வளவுதான், சிறுமி இணையத்தில் வைரலாகிவிட்டார். 






 


யார் இந்த சிறுமி?


ராஜஸ்தானில் இருந்து கேரளா குடும்பத்துடன் கேரளா வந்த கிஸ்புவின் தந்தை இறந்துவிட்டார். தந்தை இறந்ததும் பலூன் விற்கும் வேலையில் இறங்கிய கிஸ்பு ஏழ்மை நிலையில் வாழ்ந்து வந்துள்ளார். அப்போதுதான் புகைப்படக்கலைஞர் மூலம் பிரபலமாகியுள்ளார். கிஸ்புவுக்கு இனி மாடலிங் வாய்ப்புகள் வரத் தொடங்கும் என்பதால் கண்டிப்பாக இனி வரும் காலம் அவருக்கு பிரைட்டாக இருக்கும் என இணையவாசிகள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்