எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று கோவிட்- 19 பணிக்குழுத் தலைவர் வி.கே பால் தெரிவித்துள்ளார். 


கொரோனா பெருந்தொற்று பரவல் தொடர்பாக நேற்று  மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தலைவர் பல்ராம் பார்கவா, நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் டாக்டர் வி கே பால் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். 


வி.கே பால்:  செய்தியாளர்களிடம் பேசிய  வி.கே பால், "எதிர்வரும் பண்டிகை காலங்களில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்ற செய்தியை நாங்கள் தாழ்மையுடன் தெரிவிக்க விரும்புகிறோம். பண்டிகை காலங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கக் கூடும். தடுப்பூசித் திட்டத்தை துரிதப்படுத்தினாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட வேண்டும்.


வைரஸ் மரபணு ரீதியாக நிலையானதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. வைரஸில் பெரிய பிறழ்வு எதுவும் ஏற்பட்டால் நமது முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துவிடும். மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழல் இது.  தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள தயக்கம் இருக்கக் கூடாது. கர்ப்பிணி பெண்களுக்கு தற்போது தடுப்பூசிகள் போடப்படுகின்றன" என்று தெரிவித்தார். 


 



நாட்டின் 39 மாவட்டங்களில் கொரோனா வாரந்திர உறுதி விகிதம் 10%க்கும் அதிகமாக உள்ளது 


மத்திய சுகாதார செயலாளர்: கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கக் கூடும் என்று எச்சரித்த மத்திய சுகாதார செயலாளர், அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளையும் பின்பற்றுமாறு வலியுறுத்தினார். ஓணம் பண்டிகைக்குப் பிறகு கேரள மாநிலத்தில் பாதிப்புகள் அதிகரித்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.


தற்போது,பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வீழ்ச்சிகாரணமாக மனநிறைவு கொள்ளக் கூடாது எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்றும் தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடர வேண்டும் என்றும் கூறினார். 


பல்ராம் பார்கவா: 


நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது. தீவிர உடல்நலக் கோளாறு மற்றும் இறப்புகளை தடுப்பூசி குறைக்கிறது. எனினும், தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகும், மக்கள் கொரோனா நடத்தை வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். மக்கள் கூட்டம் கூடாது. தவிர்க்க முடியாத சூழலில், இரண்டு தடுப்பூசி டோஸ்கள் செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே ஒன்று கூட அனுமதிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தலைவர் பல்ராம் பார்கவா தெரிவித்தார்.   


                                             


விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லத் தடை:   


முன்னதாக, வருகிற 15ம் தேதி வரை கொண்டாடப்படவுள்ள சமய விழாக்களின் கொண்டாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. தற்போதுள்ள கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில்  விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவித்தது. அதுபோன்று, சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்வதற்கும், கரைப்பதற்கும் அனுமதி இல்லாத நிலையில், இச்சமய விழாக்களை பொது மக்கள் தங்கள் இல்லங்களிலேயே கொண்டாடுமாறு கேட்டுக் கொண்டது. 


இந்த அறிவிப்புக்கு தமிழக பாஜகவினர் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்தனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதுகுறித்து பேசுகையில், " விநாயகரை கையிலெடுத்து அரசியல் செய்ய ஆரம்பித்தால், அதே விநாயகரே திமுக அரசை முடிவுக்கு கொண்டுவர கூட எழுவார்"என்று தெரிவித்தார்.