இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்து வந்த தீவிர மோதல் முடிவுக்கு வந்த நிலையில், போருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தவர்கள், இந்திய அரசின் முடிவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுத்துள்ள முப்படைகளின் முன்னாள் தளபதி மனோஜ் நரவானே, "போர் என்றால்  ரொமான்ஸ் செய்வது அல்ல. படத்தில் வருவது போல் அல்ல" என கூறியுள்ளார்.

போர் வேணும்.. போர் வேணும்!

பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் விதமாக பாகிஸ்தான் எல்லையில் இருந்த, தீவிரவாதிகள் முகாம்கள் மீது ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இதனால் இருநாடுகளுக்கும் இடையே போர் வெடிக்கும் சூழல் இருந்தது. எல்லையில் துப்பாக்கிச் சண்டை, ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் தாக்குதல் போன்ற பரபரப்பான சூழல் நிலவியது. இதையடுத்து, யாரும் எதிர்பாராத விதமாக, இந்தியா பாகிஸ்தான் இடையே சமரசம் செய்து வைத்ததாகவும், அவர்கள் அமைதி ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் தெரிவித்ததாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பை வெளியிட்டார். மோதலை நிறுத்திக் கொள்வதாக இருநாடுகள் அறிவித்தன.

என்ன சொன்னார் முப்படைகளின் முன்னாள் தளபதி?

பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் எனக் கூறி, இந்தியா எடுத்த முடிவை சமூக வலைதளங்களில் ரத்த வெறி பிடித்த சிலர் விமர்சிக்க தொடங்கினர். புனேவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், இதற்கு பதிலடி அளித்த முப்படைகளின் முன்னாள் தளபதி மனோஜ் நரவானே, "கட்டளையிடப்பட்டால், நான் போருக்குச் செல்ல தயார். ஆனால், ராஜதந்திரமே என்னுடைய தேர்வாக இருக்கும்.

எல்லைப் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள் உள்பட அனைவரும் எப்போதும் ஒரு அச்சத்தில்தான் வாழ்ந்து வருவார்கள். தாக்குதலைக் கண்டு இரவில் பங்கர்களுக்கு ஓட வேண்டி இருக்கும். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு, அந்த அதிர்ச்சி தலைமுறை தலைமுறையாக இருக்கும். PTSD (Post Traumatic Stress Disorder) என்று ஒன்று உள்ளது. கொடூரமான காட்சிகளைக் கண்டவர்கள், சம்பவம் நடந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகும், தூக்கதில் இருந்து வியர்வையுடன் எழுந்திருப்பார்கள். அவர்களுக்கு, மனநல சிகிச்சை தேவை.

"வன்முறை தீர்வாகாது"

போர் என்றால் ரொமான்ஸ் செய்வது அல்ல. அது, உங்க பாலிவுட் படம் போன்று இல்லை. இது, ரொம்ப சீரியஸான விஷயம். போர் அல்லது வன்முறையை கடைசியாக மட்டும்தான் நாட வேண்டும். அதனாலதான், நம்ம பிரதமர் இது போரின் சகாப்தம் இல்லை என சொன்னார். புத்தி இல்லாதவர்கள், நம் மீது போர் திணிப்பார்கள் என்றாலும் நாம அதை ஆரவாரம் பண்ணக் கூடாது" என்றார்.

தேசிய பாதுகாப்பில் நாம் அனைவரும் சம பங்குதாரர்கள். நாடுகளுக்கு இடையே மட்டுமல்ல, நமக்குள்ளும், குடும்பங்களுக்கு இடையேயான அல்லது மாநிலங்கள், பிராந்தியங்கள் மற்றும் சமூகங்களுக்கு இடையேயான வேறுபாடுகளைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும். வன்முறை தீர்வாகாது" என்றார்.