கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு மேலாக மணிப்பூரில் நடந்து வரும் இனக்கலவரம் இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகிறது. பெரும்பான்மை மெய்தி சமூக மக்களுக்கும், பழங்குடி குக்கி சமூக மக்களுக்கும் இடையே நடந்த இனக்கலவரம் தேசத்தின் மனசாட்சியை உலுக்கி எடுத்தது.


தேசத்தின் மனசாட்சியை உலுக்கிய இனக்கலவரம்:


இந்த இனக்கலவரத்தின் காரணமாக இதுவரை 160 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வெளி இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளன. தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி மெய்தி சமூக மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மே மாதம் பழங்குடியினர் பேரணி நடத்தினர்.


இந்த பேரணியில் வன்முறை வெடிக்க, மணிப்பூர் முழுவதும் கலவரம் பற்றி கொண்டது. மணிப்பூரில் இயல்புநிலை திரும்பிவிட்டதாக மாநில அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது. ஆனால், பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவது, மாணவர்களை கடத்தி கொடூரமாக கொலை செய்வது என தினந்தோறும் வன்முறை சம்பவங்கள் அறங்கேறிய வண்ணம் இருக்கிறது. 


மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்திய மாணவர்களின் கொலை: 


இச்சூழலில், இரண்டு மாணவர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் மணிப்பூரில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
அந்த மாணவர்கள், கடந்த ஜூலை மாதம் மாயமாகினர். ராணுவ முகாம் போல் காட்சி அளிக்கும் இடத்தில், மாயமான இரண்டு மாணவர்களின் உடல்கள் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


இதனால் கோபமடைந்த மாணவர்கள், மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் உச்சக்கட்டமாக, நேற்று மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்கின் வீட்டின் உள்ளே நுழைய கும்பல் ஒன்று முயற்சி மேற்கொண்டது. அப்போது, குறிப்பிட்ட தூரத்திலேயே கும்பலை தடுத்து நிறுத்திய பாதுகாப்பு படை வீரர்கள், அவர்களை கலைய செய்தனர்.


இதை தொடர்ந்து, இம்பால் கிழக்கில் அமைந்துள்ள முதலமைச்சர் வீட்டின் அருகே கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் நடக்கும்போது, முதலமைச்சர் பிரேன் சிங், வீட்டில் இல்லை. 


மணிப்பூரில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, 19 காவல் நிலையங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை தவிர்த்து மலைப்பகுதிகள் முழுவதும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து மணிப்பூர் அரசு அறிவிப்பு வெளியிட்டது.


பள்ளத்தாக்கு பகுதிகளில் AFSPA-வை நீட்டிக்காமல் மலைப்பகுதிகளில் மட்டும் நீட்டிததற்கு ஆட்சேபனை தெரிவித்து பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், மணிப்பூர் முதலமைச்சர் வீட்டின் உள்ளே கும்பல் ஒன்று நுழைய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.