மணிப்பூரில் மீண்டும் இருதரப்பினரிடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றதில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு
மணிப்பூரின் நோனி மாவட்டத்தின் தவுடைஜாங் பகுதியில், நாகா பிரிவை சேர்ந்த இரு ஆயுதக்குழுக்களுக்கிடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக தெரியவருகிறது. இத்தாக்குதல் காரணமாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் கடும் அச்சத்திற்கு உள்ளாகினர். இதில் உயிரிழந்த மூவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு ஒலிப்பெருக்கி மூலம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க வன்முறை முடிவுக்கு வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
மணிப்பூரில் மீண்டும் தலையெடுக்கும் கலவரம்?
கடந்த 2023-ஆம் ஆண்டு மணிப்பூர் மக்கள்தொகையில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகம், தங்களை 'பட்டியல் பழங்குடியினர்' பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையின் தொடர்பாக, மைதேயி - குக்கி சமூகத்தினரிடையே கலவரம் ஏற்பட்டு சுமார் 200 பேருக்கு மேல் உயிரிழந்தனர். நிலைமை கைமீறியதை அடுத்து மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு வன்முறை பெருமளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் இதன் தாக்கம் குறையாமல் இன்றளவும் ஆயுதச்சண்டைகள் தொடர்கின்றன
ஓயாத வன்முறை! குறையாத பதற்றம்!
கடந்த சில நாட்களுக்கு முன்பாக நானி மாவட்டம் கிக்ரு நாகா மலைக்கிராமத்தில், கும்பல் ஒன்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குக்கி சமூகத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். இதனால் மீண்டும் பதற்றநிலை அதிகரித்து, அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். பல்வேறு பகுதிகளிலும் ஆயுதக்குழுக்களால் நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்கதையாகி உள்ள நிலையில், மக்கள் நிம்மதியின்றியும் எந்நேரமும் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
